மும்பை-ஐதராபாத், சென்னை-மைசூரு இடையே அதிவேக ரெயில் பாதை: மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்


மும்பை-ஐதராபாத், சென்னை-மைசூரு இடையே அதிவேக ரெயில் பாதை: மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்
x
தினத்தந்தி 29 Jan 2020 11:30 PM GMT (Updated: 29 Jan 2020 11:05 PM GMT)

மும்பை- ஐதராபாத், சென்னை-மைசூரு உள்பட 6 வழித்தடங்கள், அதிவேக ரெயில் பாதை அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் 6 வழித்தடங் கள், அதிவேக ரெயில் பாதை அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள் ளன. சென்னை-பெங்களூரு-மைசூரு இடையிலான 435 கி.மீ. தூர வழித்தடம் அவற்றில் அடங்கும்.

மேலும், டெல்லி-வாரணாசி (865 கி.மீ.), டெல்லி-ஆமதாபாத் (886 கி.மீ.), மும்பை-நாக்பூர் (753 கி.மீ.), மும்பை-ஐதராபாத் (711 கி.மீ.), டெல்லி-அமிர்தசரஸ் (459 கி.மீ.) ஆகியவை இதர வழித்தடங்கள் ஆகும்.

இந்த வழித்தடங்களில் நிலம் இருப்பு, தண்டவாளம் இணைத்தல், போக்குவரத்து அடர்த்தி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் அடிப்படையில் ஓராண்டுக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன்பிறகு, எந்தெந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில் பாதை, எந்தெந்த வழித்தடத்தில் நடுத்தர அதிவேக ரெயில் பாதை அமைப்பது என்று முடிவு செய்யப்படும்.

அதிவேக ரெயில் பாதையில் மணிக்கு 300 கி.மீ.க்கு மேற்பட்ட வேகத்தில் ரெயில்களை இயக்க முடியும். நடுத்தர அதிவேக ரெயில் பாதையில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்கலாம்.

மும்பை-ஆமதாபாத் இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரெயில் திட்ட பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 90 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணி 6 மாதங்களில் முடிவடையும். மொத்தப் பணியும் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று அவர் கூறினார்.


Next Story