நான் பயங்கரவாதியா? டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வேதனை


நான் பயங்கரவாதியா? டெல்லி முதல் மந்திரி  கெஜ்ரிவால் வேதனை
x
தினத்தந்தி 30 Jan 2020 10:46 AM GMT (Updated: 30 Jan 2020 10:46 AM GMT)

கெஜ்ரிவாலை பயங்கரவாதி என விமர்சித்து பாஜக நட்சத்திர பேச்சாளராக நியமிக்கப்பட்டு இருந்த பர்வேஷ் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் முடிவுகள் வரும் பிப்ரவரி 11-ந்தேதி வெளியிடப்படும்.  தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளதால், அனல் பறக்கும் பிரசாரங்களில் பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ளன. 

டெல்லி தேர்தல் பிரசாரத்தில் சமீபத்தில் பேசிய பா.ஜ., எம்.பி., பர்வேஷ் வர்மா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பான புகாரை அடுத்து பர்வேஷ் வர்மாவை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்க பா.ஜகவிற்கு உத்தரவிட்ட இந்திய தேர்தல் கமிஷன், 2 நாட்களுக்கு அவர் பிரசாரம் செய்யவும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் பர்வேஷ் சிங் பிரசாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய கெஜ்ரிவால், “ எனது வாழ்க்கை முழுவதும் மக்களுக்காகவே பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு நாளும் இந்த மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் உழைக்க முயற்சிக்கிறேன். நமது குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறேன். இத்தகைய செயல்களை செய்தால் நான் பயங்கரவாதியா?

என் உயிரையே நாட்டுக்காக கொடுக்க தயாராக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் என் மீது தாக்குதல் நடத்த எந்த வழியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எனது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். என் மீது பல வழக்குகள் போட்டுள்ளனர். அப்படி இருக்கையில் நான் எப்படி பயங்கரவாதி ஆக முடியும்? என்று உருக்கமாக பேசினார். 

டெல்லியில் உள்ள மதிப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய  பர்வேஷ்சிங்,  கெஜ்ரிவாலை போன்ற பயங்கரவாதிகள் நாட்டில் பதுங்கியுள்ளனர்.  காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாங்கள் போராட வேண்டுமா? அல்லது கெஜ்ரிவாலை போன்று நாட்டிற்குள்ளேயே இருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டுமா? என்று ஆச்சர்யப்பட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்” எனப் பேசியிருந்தார். 

Next Story