2 நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்


2 நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்
x
தினத்தந்தி 30 Jan 2020 1:24 PM GMT (Updated: 30 Jan 2020 1:24 PM GMT)

புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி நாளை 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

விலைவாசி உயர்வுக்கேற்ப புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக நாளை 31-ஆம் தேதி, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தன.

இதனிடையே ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில்  நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் அறிவித்தபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அறிவித்தபடி நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1) வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதன் மூலம், நாளை மற்றும் சனிக்கிழமை வங்கி சேவைகள் பாதிக்கப்படும். அடுத்த நாள் ஞாயிறு என்பதால் 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு கிடைக்கிறது. கடந்த 2017-இல் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இது வரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை 2017-ஆம் ஆண்டு முதலே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story