கேரள மாணவி வேறு மருத்துவமனைக்கு மாற்றம்: டெல்லியில் 6 பேரின் உடல்நிலை கண்காணிப்பு


கேரள மாணவி வேறு மருத்துவமனைக்கு மாற்றம்: டெல்லியில் 6 பேரின் உடல்நிலை கண்காணிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2020 8:59 PM GMT (Updated: 31 Jan 2020 8:59 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்கிய கேரள மாணவி வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லியில் 6 பேரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருச்சூர்,

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்குள்ள உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் கேரள மாணவி ஒருவரையும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

தற்போது கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு தனி வார்டு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மாணவி நேற்று அதிகாலையில் இந்த மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கும் நிலையில், கொரேனா வைரஸ் தாக்குதல் குறித்து யாரும் பீதியடைய தேவையில்லை என மாநில அரசு கூறியுள்ளது. எனினும் இந்த நோயின் தாக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 6 பேர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் தனி வார்டில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Next Story