கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாநில பேரிடராக அறிவிப்பு


கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு:  மாநில பேரிடராக அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2020 5:21 AM GMT (Updated: 4 Feb 2020 5:21 AM GMT)

கேரளாவில் நேற்று 3 - வது நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டதும். மாநில அரசு இதனை நேற்று "மாநில பேரிடர்" என்று அறிவித்தது.

திருவனந்தபுரம்:

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 426 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் நேற்று 3 - வது நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டதும். மாநில அரசு இதனை நேற்று மாநில பேரிடர்" என்று அறிவித்தது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்  தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் இதனை அறிவித்தார்.

கேரளாவில் உள்ள மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகளும் கடந்த மாதம் சீனாவின் வுகான் நகரிலிருந்து திரும்பிய மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் வடக்கு கேரளாவின் காசர்கோடு, மத்திய கேரளாவின் திருச்சூர் மற்றும் தெற்கு கேரளாவின் ஆலப்புழா ஆகிய மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸால் ஏற்பட்ட கொடிய நோய்க்கு எதிரான போராட்டத்தில் கேரளா அரசு சுகாதார துறையை  முடுக்கிவிட்டுள்ளது.இதற்கிடையில் வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மட்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 28 தனி வார்டுகள்  தயார் செய்யப்பட்டுள்ளன. பணிகளுக்காக 40,000 க்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள், அரசு ஊழியர்கள், கீழ் நிலை  ஊழியர்கள்  தயாராக உள்ளனர். 

கடந்த மூன்று நாட்களில், மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் உறுதிபடுத்தப்பட்டு தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  மேலும்  80 க்கும் மேற்பட்டவர்கள்  மருத்துவமனைகள் மற்றும் தனிமை வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் 2,239 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர்; அவர்களில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர், மீதமுள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட 140 மாதிரிகளில், 46 மாதிரிகள் எதிர்மறையாக முடிவுகளை கொடுத்து உள்ளன.

Next Story