டெல்லி சட்டசபை தேர்தல்; கணக்கில் காட்டப்படாத ரூ.50.97 கோடி பறிமுதல்


டெல்லி சட்டசபை தேர்தல்; கணக்கில் காட்டப்படாத ரூ.50.97 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 4 Feb 2020 2:13 PM GMT (Updated: 4 Feb 2020 2:17 PM GMT)

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு கணக்கில் காட்டப்படாத ரூ.50.97 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11ந்தேதி வெளியிடப்படும்.

தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  டெல்லியில், ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணிகளில் மும்முரமுடன் ஈடுபட்டுள்ளன.

இதற்காக நட்சத்திர பேச்சாளர்களை அறிவித்து அவர்களை கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.  பேரணிகள், பிரசாரங்கள், போஸ்டர்கள் என டெல்லி முழுவதும் தேர்தல் பரபரப்புடன் காணப்படுகிறது.  அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மக்களை கவரும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளன.  தேர்தல் வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் கடந்த ஜனவரி 6ந்தேதியில் இருந்து பிப்ரவரி 3ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கடந்த ஜனவரி 6ந்தேதியில் இருந்து நேற்று வரை பணம், மது, போதை பொருட்கள், விலை மதிப்பற்ற பொருட்கள் மற்றும் பரிசு பொருட்கள் என கணக்கில் காட்டப்படாத ரூ.50 கோடியே 97 லட்சத்து 94 ஆயிரத்து 425 மதிப்புள்ள பொருட்களை சட்ட மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

Next Story