சவுகிதார் (காவலாளி) என்று அழைத்துக்கொள்ளும் மோடியைப் போல அல்ல நான் - மம்தா பானர்ஜி


சவுகிதார் (காவலாளி) என்று அழைத்துக்கொள்ளும் மோடியைப் போல அல்ல நான் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 4 Feb 2020 4:27 PM GMT (Updated: 4 Feb 2020 4:27 PM GMT)

தன்னைத் தானே நான் ஒரு சவுகிதார் (காவலாளி) என்று அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியைப் போல அல்ல நான் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் பனிப்போர் நிலவி வருகிறது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்து அமல்படுத்த முயற்சிப்பதாக பாரதீய ஜனதா கட்சி மீது மம்தா பானர்ஜி  ஆவேசமாக சாடினார்.

ரானாகாட் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதுபற்றி பேசிய அவர், ‘‘நாம் பாரதீய ஜனதா கட்சி போன்று துச்சாதனன் கட்சி அல்ல. அது மட்டுமல்ல, அவர்கள் முகமது பின் துக்ளக்கின் சந்ததியினரும்கூட. என்னிடம் என் அம்மாவின் பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் என்னை நாட்டில் இருந்து பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு தூக்கி வீசி விடுமா?’’ என்று கேட்டார்.

மேலும், மேற்கு வங்காளத்தில் ஒருபோதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து வருகிறேன். ஆனாலும்  தேசிய குடிமக்கள் பதிவேடு மீதான அச்சம் காரணமாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னைத் தானே நான் ஒரு  சவுகிதார் (காவலாளி)  என்று அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியைப் போல அல்ல நான். நான் எல்லா நாளும் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு அறிந்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story