தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது ; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே


தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது ;  மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 6 Feb 2020 1:10 AM GMT (Updated: 6 Feb 2020 1:10 AM GMT)

அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் என்பதால், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை,

நமது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது சிவசேனாவின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். குடியுரிமை திருத்தச்சட்டத்தால், இந்திய குடிமக்களை நாட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதை நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்துக்களையும், முஸ்லிம்களையும் பாதிக்கும்.

இதன் மூலம் இந்துக்கள் உள்பட அனைத்து மத குடிமக்களும் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். அசாமில், 19 லட்சம் பேரால் தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை. இவர்களில் 14 லட்சம் பேர் இந்துக்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் அதனை ஆதரிப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே இது தொடர்பாக சட்டம் இயற்றுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் முதல்-மந்திரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருக்கும் அநீதி ஏற்படுவதை அனுமதிக்க மாட்டேன். அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட மதசிறுபான்மையினர் எத்தனை பேர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்பதை பற்றி அறிந்து கொள்ள நாட்டுமக்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் குடியமர்த்தப்படுவார்கள் என்பது அறியப்பட வேண்டும். அவர்களின் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய நிலைப்பாடு என்ன? இந்த பிரச்சினைகள் அனைத்தும் முக்கியமானவை.

மராட்டியத்தில் அவர்கள் எங்கு வசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதை முதல்-மந்திரி என்ற முறையில் நான் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இங்கு குடியுரிமை பெறும் போது பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வீடுகள் கிடைக்குமா?இங்கு எங்களது சொந்த மக்களுக்கே போதிய வீடுகள் இல்லை. குடியுரிமை பெறுபவர்கள் டெல்லி, பெங்களூரு, காஷ்மீரில் குடியமர்த்தப்படுவார்களா?பல காஷ்மீர் பண்டிதர்கள் சொந்த நாட்டிலேயே இன்னும் அகதிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்

Next Story