நிர்பயா வழக்கு ; மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை பிப்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்


நிர்பயா வழக்கு ; மத்திய அரசின்  மேல் முறையீட்டு மனுவை பிப்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
x

நிர்பயா வழக்கில் மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ‘நிர்பயா’ என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. இதனால் அவர்களை கடந்த 1-ந்தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வந்தன.

ஆனால் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரும் மாறி, மாறி கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை தாக்கல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்களை 1-ந்தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி செசன்சு கோர்ட்டு தடை விதித்தது.

செசன்சு கோர்ட்டின் இந்த தடை உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில், மத்திய உள்துறை அமைச்சகம் மேல்முறையீடு செய்தது. இதேபோல் டெல்லி சிறைத்துறையும் மேல்முறையீடு செய்தது.  விசாரணை முடிந்ததை தொடர்ந்து, தீர்ப்பளித்த டெல்லி  ஐகோர்ட், 

”குற்றவாளிகளின் நிலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு ஒருமித்த முடிவாக தீர்ப்பு வழங்காத வரையில், குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அனைவரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட வேண்டும். எனவே மத்திய அரசு மற்றும் டெல்லி சிறைத்துறையின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தெரிவித்தது. 

டெல்லி ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசு தரப்பில்,சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை வரும் 11 ஆம் தேதி விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள், மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story