பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்


பாராளுமன்றத்தில் பிரதமர்  மோடி பேசிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 8 Feb 2020 6:27 AM GMT (Updated: 8 Feb 2020 6:27 AM GMT)

பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதுடெல்லி,

பாராளுமன்ற மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது  பிரதமர் மோடி  பதிலளித்துப் பேசினார்.  பிரதமர் மோடி பேசும் போது, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.பி.ஆர்) குறித்து எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பேசினார். 

அப்போது  மோடி குறிப்பிட்ட வார்த்தை ஒன்றை அவை குறிப்பில் இருந்து நீக்கி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.  அதேபோல், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசிய வார்த்தை ஒன்றையும் அவை குறிப்பில் இருந்து நீக்கி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரதமரின் வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவது மிகவும் அரிதான செயலாகவே பார்க்கப்படுகிறது. எனினும், இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த  2018 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி, காங்கிரஸ்  மூத்த தலைவர் பிகே ஹரிபிரசாத் பற்றிப் பேசிய வார்த்தை, இழிவாக இருந்ததால்  அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அதேபோல், கடந்த 2013 ஆம் ஆண்டு, மாநிலங்களவையில்  அருண் ஜெட்லியுடன் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் காரசார விவாதத்தில் ஈடுபட்டார்.  இந்த விவாதத்தின் போது மன்மோகன் சிங் குறிப்பிட்ட சில வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. 

Next Story