டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவு; 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் பதிவு


டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவு; 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 8 Feb 2020 12:46 PM GMT (Updated: 8 Feb 2020 12:46 PM GMT)

டெல்லி சட்டசபை தேர்தலில் 5.30 மணி நிலவரப்படி 52.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

புதுடெல்லி,

70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன்  வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்தனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து  ஜனநாயக கடமையாற்றினார்.  இதேபோன்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

லோதி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தனது வாக்கை பதிவு செய்தார்.  டெல்லியில் காலை 10 மணி நிலவரப்படி 4.33 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது.

இதன்பின் காலை 11 மணி நிலவரப்படி 6.96 சதவீத வாக்குகளும், 12 மணி நிலவரப்படி 15.68 சதவீத வாக்குகளும் பதிவாகின.  கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மந்தகதியில் வாக்கு பதிவு நடந்து வந்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 19.37% வாக்குகள் பதிவாகியிருந்தன.  இதன்பின் மதியம் 2 மணியளவில் 28.14 சதவீத வாக்குகளும், 3 மணி நிலவரப்படி 30.18 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.  தொடர்ந்து நடந்த வாக்கு பதிவில் விறுவிறுப்பு கூடியது.  இதனால் 4 மணி நிலவரப்படி 42.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.  5 மணி வரை 44.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு தொகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவர்களின் மகன் ரைஹான் ராஜீவ் வதேரா ஆகியோர் இன்று வாக்களித்தனர்.  இதில் ரைஹான் முதன்முறையாக தனது வாக்கினை செலுத்தினார்.  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் வாக்களித்து சென்றார்.  இதேபோன்று சஞ்சார் பவன் பகுதியில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் காரத் வாக்களித்து உள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் 5.30 மணி நிலவரப்படி 52.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.  இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்பவர்களுக்கு என டோக்கன் வழங்கப்படும்.  இதனை கொண்டு அவர்கள் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

Next Story