சிந்து சமவெளி சரஸ்வதி நாகரிகமா? வரலாறு, நாகரிகத்தை திரிக்க மத்திய அரசு முயற்சி நாடாளுமன்றத்தில் வைகோ குற்றச்சாட்டு


சிந்து சமவெளி சரஸ்வதி நாகரிகமா? வரலாறு, நாகரிகத்தை திரிக்க மத்திய அரசு முயற்சி நாடாளுமன்றத்தில் வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Feb 2020 10:19 PM GMT (Updated: 10 Feb 2020 10:19 PM GMT)

வரலாறு, நாகரிகத்தை திரிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக நாடாளுமன்றத்தில் வைகோ குற்றம்சாட்டி பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில், தாமிரபரணி ஆற்றங்கரையில், ஆதிச்சநல்லூரில், தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைக்கேட்டு, மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதேபோல, மத்திய அரசின் சார்பில், கீழடியிலும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர் நாகரிகம், உலகின் தொன்மையான நாகரிகம் என்பது, தொல்பொருள் மற்றும் அறிவியல் ஆய்வுகளின் வழியாக உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

உலக அளவில் நிலவுகிற வணிகத் தேக்கநிலை, வணிகப்போட்டியில் இந்தியா பின்தங்கி விடக்கூடாது. பொருட்களின் ஆக்கத்தில் மனித உழைப்பு மற்றும் வணிக நடவடிக்கைகளில், 1991-ம் ஆண்டு அறிமுகமான தாராளமயத்தால் ஏற்பட்ட வளர்ச்சியில் இருந்து நாம் பின்தங்கி விடக்கூடாது.

ஏழைகள் பணம்

இன்று நிலவுகிற பொருளாதார மந்த நிலைக்கும், மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளுக்கும், இந்த அரசு மட்டுமே பொறுப்பு ஆகும். ஏழைகளின் பணத்தை எடுத்து, செல்வந்தர்களுக்கு தருகிறீர்கள். எனவே, ஏழைகள் மேலும் ஏழைகளாகத்தான் ஆவார்கள்; பணக்காரர்களிடம் மேலும் செல்வம் குவியும்.

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், எல்.ஐ.சி. நிறுவனங்களின் பங்குகளை விலக்குவதாக அறிவித்து இருக்கிறீர்கள். எல்.ஐ.சி. பங்குகளை விலக்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். காரணம், அது மிகப்பெரிய ஆதாயத்தை ஈட்டித் தருகிறது. கஸ்தூரிரங்கன் குழு வகுத்து அளித்த புதிய கல்விக்கொள்கையை அறிமுகம் செய்வது என்பது, இந்தி, சமஸ்கிருதத்தை புகுத்த வேண்டும் என்ற இந்துத்துவ கொள்கையைத் திணிப்பதே ஆகும்.

நாகரிகத்தை திரிக்க முயற்சி

சிந்து சமவெளி நாகரிகத்தை திடீரென சரஸ்வதி நாகரிகம் என்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்படி ஒரு நதி இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அது ஒரு மாயை. ஈராஸ் பாதிரியாரும், பல்வேறு வரலாற்று ஆய்வு அறிஞர்களும், மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்பதை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு, வரலாறையும், பண்பாடு நாகரிகத்தையும் திரிக்க முயற்சிக்கிறது.

இவ்வாறு வைகோ பேசினார்.

Next Story