பிற்பகலுக்குள் முடிவு தெரியும் டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை ஆட்சியை தக்க வைக்குமா, ஆம் ஆத்மி?


பிற்பகலுக்குள் முடிவு தெரியும்   டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை   ஆட்சியை தக்க வைக்குமா, ஆம் ஆத்மி?
x
தினத்தந்தி 11 Feb 2020 12:00 AM GMT (Updated: 10 Feb 2020 11:11 PM GMT)

டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

புதுடெல்லி,

டெல்லி மாநிலத்தின் 70 உறுப்பினர் சட்டசபைக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளின் இறுதி நிலவரத்தை சுமார் 24 மணி நேரத்துக்குப்பின்னரே தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த தாமதத்துக்காக ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தில் 21 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக 33 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

டெல்லி சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை குறைவு என்பதாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட்டதாலும் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பிற்பகலுக்குள் வெளியாகும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தேர்தலில் போட்டியிட்ட 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. எனினும் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும், மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மிக்கும் இடையேயான போட்டியாக கருதப்பட்ட இந்த தேர்தலில் வெற்றி பெற்று தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

Next Story