இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லி மக்களுக்கு நன்றி - பிரசாந்த் கிஷோர்


இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லி மக்களுக்கு நன்றி -  பிரசாந்த் கிஷோர்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:03 AM GMT (Updated: 11 Feb 2020 10:22 AM GMT)

இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்த டெல்லி மக்களுக்கு நன்றி என்று ஆம் ஆத்மிக்கு தேர்தல் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது.  இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்து ஊடகங்களும் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது.

கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி கண்ட நிலையில் தற்போது அக்கட்சி 63 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களையே கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. 

இந்நிலையில், இந்தியாவின் ஆன்மாவை பாதுகாப்பதற்கு உறுதுணையாக  இருந்த டெல்லி மக்களுக்கு நன்றி என ஐபேக் நிறுவனத்தின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் 3-ஆம் முறையாக ஆட்சியை பிடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தது பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்துக் கொடுப்பதுடன், பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது நினைவுகூறத்தக்கது.

கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின்போதும், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க கிஷோர் பணியாற்றினார்.

Next Story