7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்


7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 11 Feb 2020 11:35 AM GMT (Updated: 11 Feb 2020 12:45 PM GMT)

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கவர்னர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்தநிலையில் பேரறிவாளன் மனு மீதான விசாரணை இன்று  நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வுக்கு முன் வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது என்று கூறினார். மேலும்  தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்கள் அல்ல என்று தெரிவித்தார். இதனையடுத்து  இந்த வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

7 பேர் விடுதலை குறித்த கோப்பு ஆளுநர் முன்பு ஏன் இத்தனை மாதம் நிலுவையில் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

 7 பேர் விடுதலை விவகாரத்தில்  அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Next Story