தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை கட்டிடம் - ஒரு சிறப்பு பார்வை + "||" + Delhi Assembly building story

டெல்லி சட்டசபை கட்டிடம் - ஒரு சிறப்பு பார்வை

டெல்லி சட்டசபை கட்டிடம் - ஒரு சிறப்பு பார்வை
டெல்லி சட்டசபை கட்டிடம் உருவான விதம் குறித்த செய்தி தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கடந்த 8 ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்த டெல்லி சட்டசபையில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று  காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னணியில் இருப்பதால், தற்போதைய முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால், மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார். தொடர்ந்து, 3வது முறையாக முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் ஹாட்ரிக் சாதனை படைக்கிறார்.

இந்தநிலையில் டெல்லி சட்டசபை கட்டிடம் உருவான விதம் குறித்த செய்தி தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911 ஆம் ஆண்டு வரை  நாட்டின் தலைநகராக கொல்கத்தா இருந்தது. அதுவரை அந்நகரில்  இருந்த அரசு இல்லத்தில் தான் அன்றைய நாடாளுமன்ற கவுன்சில் கூட்டம் நடைபெற்று வந்தது.

* இந்து -முஸ்லிம் ஒற்றுமைக்கான பழம்பெரும் பாரம்பரியத்திற்காகவும், புவியியல் ரீதியாக கேந்திரமான பகுதியாகவும் டெல்லி அமைந்ததால் அதை நாட்டின் தலைநகராக மாற்றியமைத்தனர் ஆங்கிலேயர்கள்.

* இதைத்தொடர்ந்து டெல்லியில் நாடாளுமன்ற கவுன்சில் கூட்டத்தை நடத்த ஒரு கட்டிடம் தேவைப்பட்டது. இதை வடிவமைக்கும் பொறுப்பு மான்டேக் தாமஸ் இடம் அளிக்கப்பட்டது. 

* பழைய தலைமைச் செயலகம் என அழைக்கப்படும், அலிப்பூர் சாலையில் அமைந்துள்ள தற்போதைய டெல்லி  சட்டசபை கட்டிடம், 1912-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, முதல் கூட்டம் 1913 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி நடைபெற்றது. 

* 1926-ஆம் ஆண்டு வரை அப்போதைய மத்திய அரசின் கவுன்சில் கூட்டம் இன்றைய சட்டப்சபை கட்டிடத்தில் தான் நடைபெற்றது.

* 1912- ஆம் ஆண்டு தொடங்கி 1920-ஆம் ஆண்டு வரை இருந்த ஆங்கிலேயே சட்டசபை கவுன்சில் கூட்டம், இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் தான் நடைபெற்றது. 

* அன்றைய காலகட்டத்தில்தான், பட்ஜெட், ரெயில் கட்டணம், ரெயில்வே சீர்திருத்தம் போன்ற முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

* ரௌலட் மசோதா தொடர்பான விவாதத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற நாடாளுமன்றவாதிகள் பங்கேற்று, ரௌலட் மசோதா, தனிநபரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என முழக்கமிட்டு உரையாற்றினர். 

* அப்போது இந்த விவாதத்தை மாடத்திலிருந்து பார்ப்பதற்காக மகாத்மா காந்தி வந்திருந்தார்.

* தற்போது உள்ள நாடாளுமன்றம், கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பழைய தலைமைச் செயலக கட்டிடம் நீண்ட காலம் பயன்பாடற்று இருந்தது. டெல்லி சி பிரிவு மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது. 

* 1993-ஆம் ஆண்டு தொடங்கி டெல்லி சட்டசபை இந்த பழைய தலைமைச் செயலக கட்டடத்தில் தான் நடைபெற்று வருகிறது.

* 1912-ஆம் ஆண்டு தொடங்கி 1926-ஆம் ஆண்டு வரை, அப்போதைய மத்திய அரசின் அதிகார மையமாகவும், நாடாளுமன்றமாகவும் இப்போது உள்ள சட்டசபை கட்டிடம் செயல்பட்டது. 

* வரலாற்று சிறப்புமிக்க டெல்லி சட்டசபையின் தற்போதைய செயலாளராக, தமிழரான சி. வேல்முருகன் பணியாற்றி வருகிறார் என்றால் பெருமைக்குரிய விஷயமாகும்.