வாங்கும் திறனை அதிகரிப்பதற்கு பதில் சாதாரண மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கலாமா? ‘பட்ஜெட்’ விவாதத்தின்போது தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி


வாங்கும் திறனை அதிகரிப்பதற்கு பதில்   சாதாரண மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கலாமா?   ‘பட்ஜெட்’ விவாதத்தின்போது தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி
x
தினத்தந்தி 11 Feb 2020 10:34 PM GMT (Updated: 11 Feb 2020 10:34 PM GMT)

வாங்கும் திறனை அதிகரிப்பதற்கு பதிலாக சாதாரண மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கலாமா? என்று தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி,

மக்களவையில் நடந்த ‘பட்ஜெட்’ மீதான விவாதத்தில், மத்திய சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசியதாவது:-

‘பட்ஜெட்’ தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவதற்கு நடுத்தர வருவாய் பெறும் மகள் ஆடிட்டரை பார்க்க செல்லவேண்டாம். ஒரு கிளிக் போதும், எளிதான வரி செலுத்திவிடலாம்’ என்று கூறினார். ஆனால் புதிய வரி சட்டத்தை புரிந்துகொள்ளவே ஆடிட்டருக்கு இன்னும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியநிலை உள்ளது.

புதிய வரிமுறையை எளிதாக விவரிக்க வேண்டுமென்றால் தோசை கடையை உதாரணமாக சொல்லலாம். ஒரு மசால்தோசை ரூ.50-க்கு விற்கப்படுகிறது. புதிய வரி விதிப்புக்கு பின் மசால் தோசையின் விலை ரூ.45. ஆனால் நிபந்தனைக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது சாம்பார் வேண்டுமென்றால் ரூ.15 கூடுதலாக செலுத்தவேண்டும். சட்னி வேண்டுமென்றால் ரூ.15 கூடுதலாக செலுத்த வேண்டும். ஆக, ரூ.50-க்கு கிடைத்த மசால் தோசையின் தற்போதைய விலை ரூ.80. இப்படித்தான் ‘பட்ஜெட்’ உள்ளது.

சாதாரண மக்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதற்கு பதில், அரசு அவர்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது.

ரஜினிக்கு நிவாரணம்; விஜய்க்கு குறி

எல்.ஐ.சி., ஏர் இந்தியாவை மட்டும் நிதி மந்திரி விற்கவில்லை. பி.எஸ்.என்.எல்., பி.பி.சி.எல். உள்பட பல நிறுவனங்களை அரசு விற்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளையும் அரசு விற்கிறது. அதிக வசூல் செய்யும் மையங்களாக நெடுஞ்சாலைகள் மாற்றப்படுகின்றன. தற்போது பங்குகளில் முதலீடு செய்பவர்கள் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை ஈவுத்தொகை வரி செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல ஆதாருக்காக ரூ.12 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. அதில் முக்கிய தகவல்கள் அனைத்தும் உள்ளன. இந்த நிலையில் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு அரசு ஏன் ரூ.4 ஆயிரத்து 800 கோடி செலவழிக்க வேண்டும்?

வருமான வரி அதிகாரிகள் தொந்தரவு இருக்காது, வரி செலுத்துவதில் பாகுபாடு இருக்காது என்று நிதி மந்திரி கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது? அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.1 கோடி வரி நிவாரணம் கிடைக்கிறது. முகம் இல்லாத உங்களது வரி நிறுவனம் நடிகர் விஜய்க்கு குறி வைக்கிறது.

தமிழுக்கு என்ன செய்தீர்கள்?

தமிழ் மொழி பற்றி பேசுகிறீர்கள், திருக்குறள் கூறுகிறீர்கள். ஆனால் தமிழுக்காக என்ன செய்தீர்கள்? சமஸ்கிருதத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் செம்மொழி தமிழுக்கு எதுவும் செலவழிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story