அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு


அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர்   கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2020 12:00 AM GMT (Updated: 11 Feb 2020 10:54 PM GMT)

டெல்லியில் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வந்தவர்.

புதுடெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 1968-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி அரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்தார்.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த அவர் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் மத்திய அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய வருவாய்த்துறை அதிகாரி ஆனார். பணியில் இருந்து கொண்டே தகவல் பெறும் உரிமை சட்டத்தை அடிமட்ட அளவில் அமல்படுத்துவதற்காக போராடினார்.

மகசேசே விருது

இதற்காக, அவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு புகழ்பெற்ற ‘ரமோன் மகசேசே’ விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டு பிப்ரவரி மாதம், தான் பார்த்து வந்த வருமான வரித்துறை இணை ஆணையர் பணியில் இருந்து விலகி, முழுநேர சமூக பணியில் ஈடுபடத் தொடங்கினார். ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். தனக்கு கிடைத்த ‘மகசேசே’ விருது பணத்தை தொண்டு நிறுவன நிதியில் சேர்த்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு, சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவில் சேர்ந்தார். லோக்பால் மசோதாவுக்கான போராட்டங்களில் ஈடுபட்டார்.

கட்சி தொடங்கினார்

2012-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, அன்னா ஹசாரே குழுவில் இருந்து விலகி, ‘ஆம் ஆத்மி’ கட்சியை தொடங்கினார். 2013-ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார். ஆனால், 49 நாட்களிலேயே அப்பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 67 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக முதல்-மந்திரி ஆனார்.

தற்போது மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். அவருடைய மனைவி சுனிதாவும் இந்திய வருவாய்த்துறை அதிகாரி ஆவார்.

இந்த தம்பதிக்கு புல்கிட் என்ற மகனும், ஹர்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.

Next Story