ஹபீஸ் சயீதுக்கு தண்டனை: பாகிஸ்தானின் நடவடிக்கை மீது இந்தியா சந்தேகம்?


ஹபீஸ் சயீதுக்கு தண்டனை:  பாகிஸ்தானின் நடவடிக்கை  மீது இந்தியா சந்தேகம்?
x
தினத்தந்தி 13 Feb 2020 5:50 AM GMT (Updated: 13 Feb 2020 5:50 AM GMT)

ஹபீஸ் சயீதுக்கு தண்டனை வழங்கிய பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது

இஸ்லாமாபாத்,

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு  நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.

கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க கருவூல துறையானது சயீத் சர்வதேச குற்றவாளி என அறிவித்து, அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி  ஹபீஸ் சயீத் தான் என பாகிஸ்தானிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்க மறுத்ததுடன் போதிய ஆதாரம் இல்லை என்று பாகிஸ்தான்  கூறியது.  மேலும் அந்நாட்டிலே  ஹபீஸ் மீது வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்த நிலையில்  தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட 2 வழக்குகளில்  லாகூரில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் (ஏடிசி) புதன்கிழமை சயீதுக்கு தலா ஐந்தரையாண்டுகள் என  11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளது.

ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களுக்காக 23 வழக்குகள் உள்ளன.  முன்னதாக 2017 ஆம் ஆண்டில், ஹபீஸ் சயீத் மற்றும் அவருடைய 4 உதவியாளர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் பயங்கரவாத சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

நிதி நடவடிக்கை பணிக்குழு கடைசி கூட்டத்தில் பயங்கரவாத நிதியளிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பாகிஸ்தான் சாம்பல்  பட்டியலில் நீடிக்கும் என்றும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும்  எச்சரிகை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்தாவது:-

நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முழுமையான கூட்டத்திற்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது கவனிக்கப்பட வேண்டியது. இந்த நடவடிக்கை எதற்காக என்பது தற்போது தெளிவாக தெரிகிறது.   லாகூர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு  பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் பாரிஸ் கூட்டத்தின் பின்னணியில் இதை பார்க்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை முடிவுக்கு கொண்டு வருவது பாகிஸ்தானின் நீண்டகால சர்வதேச கடமையின் ஒரு பகுதியாகும். 

பாகிஸ்தான் மற்ற அனைத்து பயங்கரவாத நிறுவனங்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து செயல்படும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா? என்பதையும், மும்பை (2008) மற்றும் பதான்கோட் (2016) உள்ளிட்ட எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டோரை விரைவாக நீதி முன் கொண்டு வருமா என்பதையும் பார்க்க வேண்டும் என  தெரிவித்து உள்ளன. 

Next Story