குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டளை


குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை   அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டளை
x
தினத்தந்தி 14 Feb 2020 12:15 AM GMT (Updated: 13 Feb 2020 11:46 PM GMT)

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

புதுடெல்லி, 

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

குற்றப்பின்னணி

இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மூத்த வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் குற்றப்பின்னணி குறித்து மக்களுக்கு சமூக ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும், அச்சு ஊடகங்களிலும் பகிரங்கமாக தெரிவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, “அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்தும் அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும்” என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி படிவம் எண் 26-ஐ தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், வேட்பாளர்கள் தங்கள் குற்றப்பின்னணி குறித்து குறிப்பிட வேண்டும் என தெரிவித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

வழிகாட்டுதல்கள் இல்லை

தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிக்கை தெளிவில்லாமல் உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கள் தங்கள் குற்றப்பின்னணி குறித்து எந்தெந்த முன்னணி நாளேடுகளில், தொலைக்காட்சிகளில் எத்தனை நாட்களுக் குள் விளம்பரம் வெளியிட வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை.

பொதுமக்களும், வாக்காளர்களும் பார்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டாத தொலைக் காட்சிகளிலும், மக்களிடையே அதிக வாசிப்பு இல்லாத நாளேடுகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் விளம்பரம் செய்து தப்பித்து விடுகிறார்கள். எனவே சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை முறையாக செயல்படுத்தும் வகையில் உரிய விதிமுறைகளை உருவாக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் தீர்ப்பு

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரோஹின்டன் பாலி நாரிமன் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி 31-ந் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

இணையதளத்தில் வெளியிடவேண்டும்

குற்றப்பின்னணி உடையவர்கள் போட்டியிடுவது கடந்த 4 பொதுத்தேர்தல்களில் மிகவும் அதிகரித்து இருக்கிறது. இனி வரும் காலங்களில், அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்ததும் அவர்கள் மீது நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகள், விவரங்களை தங்கள் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் அந்த வேட்பாளர்களை ஏன் தேர்வு செய்தோம் என்பதற்கான காரணத்தையும் அதில் தெரிவிக்க வேண்டும்.

வேட்பாளர்களை தேர்வு செய்ததற்கான காரணம் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, வெல்லக்கூடிய சாத்தியத்தால் தேர்வு செய்ததாக இருக்கக்கூடாது. அதை நியாயப்படுத்தவும் கூடாது.

நாளேடுகளில் விளம்பரம்

மேலும், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அல்லது வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு 2 வாரங்கள் முன்னதாக முக்கியமான பிராந்திய நாளேடு, தேசிய நாளேடு மற்றும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்கள் வேட்பாளர்கள் குறித்த விவரங்களையும், அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த தகவல்களையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.

எந்த வகையான குற்றத்துக்காக அந்த வேட்பாளரின் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்றும், அந்த வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா? இல்லையா? என்றும் தங்கள் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும், நாளேடு விளம்பரங்களிலும் தெரிவிக்க வேண்டும்.

72 மணி நேரத்துக்குள்...

அப்படி வெளியிட்ட 72 மணி நேரத்துக்குள், முக்கியமான பிராந்திய நாளேடு, தேசிய நாளேடு, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யாத பட்சத்தில் தேர்தல் கமிஷன் அதை சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது.

Next Story