டிரம்ப்பின் 3 மணி நேர குஜராத் பயணத்திற்கு ரூ.100 கோடி செலவு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 15 Feb 2020 12:13 PM GMT (Updated: 15 Feb 2020 12:13 PM GMT)

டிரம்ப் வருகையையொட்டி 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அகமதபாத் நகரை அழகுப்படுத்தியும், சாலைகள் சீரமைக்கப்பட்டும் வருகின்றன.

அகமதாபாத் 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

இந்தியா வரும் ஜனாதிபதி  டிரம்பையும் அவரது மனைவியையும் வரவேற்கும் குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகி வருகிறது. 

அகமதாபாத்துக்கு 24ம் தேதி வரும் டிரம்ப், அங்கு சுமார் 3 மணி நேரம் தங்கியிருக்கவுள்ளார். இதையொட்டி அகமதாபாத் நகராட்சியும், அகமதபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து நகரை அழகுப்படுத்தியும், சாலைகளை சீரமைத்தும் வருகின்றன.

80 கோடி ரூபாயில் சாலை சீரமைப்பு மற்றும் புதிதாக சாலை அமைத்தல் பணியும், 12 கோடி முதல் 15 கோடி ரூபாயில் பாதுகாப்பு பணியும், 7 கோடி முதல் 10 கோடி ரூபாயில் விருந்தினர்களின் போக்குவரத்து, தங்குவதற்கான ஏற்பாடும், 6 கோடி ரூபாயில் சாலை நடுவே மரக்கன்றுகளை நடும் பணியும், 4 கோடி ரூபாயில் மோடி-டிரம்ப் பயணிக்கும் பாதையில் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடும் நடைபெறுகின்றன

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது.

ஆனால் அதை அகமதாபாத் நகராட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா, சாலையில் ஆக்கிரமிப்பு நடைபெறுவதை தடுக்க சுவர் கட்டுவது என்று 2 மாதங்களுக்கு முன்பே முடிவு எடுக்கப்பட்டதாகவும், டிரம்ப் வருகைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story