வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்


வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 15 Feb 2020 11:45 PM GMT (Updated: 15 Feb 2020 9:44 PM GMT)

வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் நள்ளிரவுக்குள் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி செலுத்துமாறு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டதின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி,

வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை நள்ளிரவுக்குள் செலுத்துமாறு நேற்று முன்தினம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, அந்த தொலைதொடர்பு சேவை நிறுவனங்களை அலற வைத்து விட்டது.

இப்படி ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதின் பின்னணி இதுதான்.

தொலைதொடர்பு துறை நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டினால் பிறப்பிக்கப்பட்டது ஆகும்.

இந்த உத்தரவை வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதிக்குள் ஏற்று செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவை செயல்படுத்தவில்லை.

இதில் முக்கிய அம்சம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாக, இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் அந்த தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டாம், செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டாம் என தொலை தொடர்பு துறை டெஸ்க் அதிகாரி ஜனவரி 23-ந் தேதி ஒரு உத்தரவை (சுற்றறிக்கை) அனுப்பி உள்ளார்.

இந்தநிலையில், சம்மந்தப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் நீதிபதி அருண் மிஷ்ரா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, இந்த உத்தரவு (சுற்றறிக்கை) சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு வந்தது.

அப்போது தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாக சுற்றறிக்கை அனுப்பிய தொலை தொடர்புதுறை டெஸ்க் அதிகாரிக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

அப்போது நீதிபதி அருண் மிஷ்ரா, தொலை தொடர்பு துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை பார்த்து கோபத்துடன் கூறியதாவது:-

அப்படியென்றால் நாம் சுப்ரீம் கோர்ட்டை மூடி விடலாம். இந்த நாட்டில் எந்த சட்டமும் இல்லை. நாங்கள் மிகவும் வருத்தம் அடைகிறோம். இந்த அமைப்பில் நான் வேலை செய்யக்கூடாது என்று உணர்கிறேன். இந்த முட்டாள்தனமான செயலுக்கு பின்னால் இருப்பது யார்?

உங்கள் துறையில் உள்ள சாதாரண டெஸ்க் அதிகாரி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி, அவர்கள் (தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள்) யாரும் பணம் செலுத்த வேண்டாம், அவர்களை நிர்ப்பந்திக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உத்தரவிட்டிருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு அவர் எழுத்துப்பூர்வமாக எப்படி தடை போட முடியும்? என்ன துணிச்சல் இது? இதற்காக நீங்கள் (அரசு) ஒரு முறை அவரை கேள்வி கேட்டது உண்டா?

இந்த முட்டாள்தனமான செயலுக்கு பின்னால் உள்ள டெஸ்க் அதிகாரி தன்னை சுப்ரீம் கோர்ட்டு என்று கருதுகிறாரா? இது முற்றிலும் அவமதிப்பு. 100 சதவீதம் அவமதிப்பு.

இந்த உத்தரவை உங்கள் டெஸ்க் அதிகாரி அடுத்த ஒரு மணி நேரத்தில் அல்லது 30 நிமிடங்களில் திரும்பப்பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர் இன்றைக்கே சிறைக்கு போக வேண்டியது வரும். உடனடியாக அதை திரும்பப்பெறுங்கள். அவர் இங்கே வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி அருண்மிஷ்ராவிடம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உங்கள் தயாள குணத்தை நாங்கள் அனைவரும் அறிந்திருக்கிறோம்” என கூறி அமைதிப்படுத்த முயற்சித்தார்.

அப்போது நீதிபதி அருண் மிஷ்ரா, “இல்லை.. நீங்கள் என்னை ஒரு அங்குல அளவுக்கு கூட அறிந்திருக்கவில்லை. இந்த உலகில் யாரிடம் இருந்தும் நாங்கள் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நான் என்னைப் பற்றி கவலைப்படவில்லை. உள்ளபடியே சொல்கிறேன், இந்த நாட்டில் வாழாமல் இருப்பது நல்லது. இந்த டெஸ்க் அதிகாரி அரசியலமைப்பு அதிகாரிகளை மீறி எழுதுகிறார். தடை வழங்குகிறார். இந்த நாட்டின் நீதி அமைப்பே எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது” என்று கூறினார்.

இதையடுத்துத்தான் தொலை தொடர்பு துறை உடனடியாக நேற்றுமுன்தினம் செயல்பட்டது. அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. தனது டெஸ்க் அதிகாரி பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற்றது. தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை அன்று நள்ளிரவுக்குள் (நேற்று முன்தினம்) செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, தொலை தொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது.

Next Story