தேசிய செய்திகள்

சிக்கமகளூரு-உடுப்பி மலைப்பாதையில் பாறையில் பஸ் மோதி 9 பேர் சாவு + "||" + 9 killed in bus collision on Chikkamagaluru-Udupi highway

சிக்கமகளூரு-உடுப்பி மலைப்பாதையில் பாறையில் பஸ் மோதி 9 பேர் சாவு

சிக்கமகளூரு-உடுப்பி மலைப்பாதையில் பாறையில் பஸ் மோதி 9 பேர் சாவு
சிக்கமகளூரு-உடுப்பி மலைப்பாதையில் பாறையில் சுற்றுலா பஸ் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா சென்ற மைசூருவை சேர்ந்தவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்து உள்ளது.
மங்களூரு, 

சிக்கமகளூருவில் இருந்து உடுப்பிக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையின் வழியாக தினமும் சிக்கமகளூருவில் இருந்து உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைப்பாதை மிகவும் குறுகியது ஆகும். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த மலைப்பாதையில் உள்ள மாலா-எஸ்.கே.பார்டர் பகுதியில் ஒரு சுற்றுலா பஸ் சென்று கொண்டு இருந்தது.

அப்போது சாலையின் குறுகலான பகுதியில் பஸ்சை திருப்ப டிரைவர் முயன்று உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சாலையோரமாக இருந்த பாறையின் மீது மோதிக் கொண்டு சென்றது.

இந்த விபத்தில் சுற்றுலா பஸ்சில் பயணம் செய்த 3 பெண்கள், 6 ஆண்கள் என 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த உடுப்பி மாவட்டம் கார்கலா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 26 பேரை சிகிச்சைக்காக கார்கலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்தில் பலியான 9 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் மைசூருவை சேர்ந்த பசவராஜ்(வயது 22), ராதாரவி(22), யோகேந்திரா(21), பிரீத்தம் கவுடா(21), சரோல்(21), அனாக்(21), ரஞ்சிதா(22), ஆஞ்சனா, வினுதா என்பது தெரியவந்தது.

இவர்கள் உள்பட 35 பேரும் மைசூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், மங்களூரு, சிக்கமகளூருவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்த 35 பேரும் நேற்று முன்தினம் சுற்றுலா பஸ்சில் புறப்பட்டு சென்றதும் தெரிந்தது. முதலில் சிக்கமகளூருவில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த இவர்கள், அங்கிருந்து மங்களூருவுக்கு சென்ற போது பஸ் விபத்தில் சிக்கியதும், அதில் 9 பேர் இறந்ததும், 26 பேர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்களின் பெயர்கள் உடனடியாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து விபத்தில் பலியான 9 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன் பார்வையிட்டு விசாரித்தார். இந்த விபத்து குறித்து கார்கலா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.