டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியீடு


டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியீடு
x
தினத்தந்தி 16 Feb 2020 12:18 PM GMT (Updated: 16 Feb 2020 12:18 PM GMT)

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த டிசம்பர் 15ந்தேதி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன.  தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. 6 போலீஸ்காரர்களும் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் 35 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  எனினும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என அரசு சார்பில் கூறப்பட்டு வந்தது.  இந்நிலையில், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்களை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில், எம்.பில். பட்டமேற்படிப்பு பிரிவு உள்ளது.  இது படிக்கும் அறையாக செயல்பட்டு வந்துள்ளது.  இதனிடையே, காவலர்கள் உடையணிந்த சிலர் அதிரடியாக இந்த அறைக்குள் நுழைகின்றனர்.

அவர்கள் வருவது அறிந்து அதற்கு முன்பே, நபரொருவர் மேஜை ஒன்றின் கீழ் ஒளிந்து கொள்கிறார்.  மற்றொரு நபர் அங்குமிங்கும் ஓடுகிறார்.  உள்ளே நுழைந்த சில காவலர்கள் அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்குகின்றனர்.

இதனால் அச்சத்தில் மாணவர்கள் சிலர் தப்பியோடுகின்றனர்.  தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.  49 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை ஜாமியா ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டு உள்ளது.

இந்த குழு, பழைய மாணவர்கள் மற்றும் இந்நாள் மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்டது.  எனினும், பல்கலைக்கழகம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில், வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை.

டுவிட்டர் கணக்குகள், முகநூல் பக்கங்கள் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பிற பயனாளர்கள், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பெயரை பயன்படுத்துகின்றனர்.  மக்களிடையே குழப்பம் விளைவிக்கின்றனர் என தெரிவித்து உள்ளது.

இந்த வீடியேவை டுவிட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, காவலர்களின் செயல் ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி உளவு பிரிவு சிறப்பு காவல் ஆணையாளர் பிரவீன் ரஞ்சன், வீடியோ பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது.  நடந்து வரும் விசாரணையுடன் ஒரு பகுதியாக இதனை பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

Next Story