ராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா? புத்தகத்தில் புதிய தகவல்


ராகுல்காந்தியின் நடவடிக்கையால் மன்மோகன்சிங் பதவி விலக விரும்பினாரா? புத்தகத்தில் புதிய தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2020 10:30 PM GMT (Updated: 16 Feb 2020 9:21 PM GMT)

காங்கிரஸ் ஆட்சியின் போது அவசர சட்ட நகலை ராகுல்காந்தி கிழிந்தெறிந்த சம்பவத்தால், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் பதவி விலக விரும்பியதாக மாண்டேக்சிங் அலுவாலியா எழுதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

மன்மோகன் சிங் தலைமையில் 2013-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போது கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை செல்லாமல் ஆக்குகிற வகையில் ஒரு அவசர சட்டத்தை அன்றைய மத்திய அரசு இயற்றி, ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

இந்த அவசர சட்டமானது, கிரிமினல் வழக்கில் தண்டிக் கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தண்டனையை எதிர்த்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, அதில் தண்டனைக்கு தடை வந்தால், அவர்கள் சம்பளம் அல்லது வாக்களிக்கும் உரிமை இன்றி பதவியில் தொடர அனுமதி அளிக்க வகை செய்தது.

இந்த தருணத்தில் (2013-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ந் தேதி) காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, டெல்லியில் நிருபர் களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், அந்த அவசர சட்டத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்து, அவசர சட்ட நகலை கிழித்தெறிந்தார். இது அப்போது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார். மத்திய திட்டக்குழு துணை தலைவராக இருந்து வந்த மாண்டேக் சிங் அலுவாலியாவும் மன்மோகன் சிங்குடன் அமெரிக்கா சென்றிருந்தார்.

அப்போது ராகுல் காந்தி அவசர சட்ட நகலை கிழித்தெறிந்ததையொட்டிய நிகழ்வுகளை, மாண்டேக் சிங் அலுவாலியா தற்போது எழுதியுள்ள ‘பேக் ஸ்டேஜ்: தி ஸ்டோரி பிஹைண்ட் இந்தியா’ஸ் ஹைகுரோத் இயர்ஸ்’ (பின்னணி: இந்தியாவின் உயர் வளர்ச்சி ஆண்டுகளின் பின்னணியில் உள்ள கதை) என்ற பெயரில் எழுதி உள்ள புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

(அமெரிக்க பயணத்தின்போது) நியூயார்க்கில் பிரதமருடனான தூதுக்குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற எனது சகோதரர் சஞ்சீவ் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். அவர் பிரதமரை மிகவும் விமர்சித்து தான் ஒரு கட்டுரை எழுதி இருப்பதாக தெரிவித்தார். இந்த கட்டுரையை அவர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பினார். மேலும் நான் அதைக் கண்டு தர்மசங்கடம் அடைய மாட்டேன் என தான் நம்புவதாகவும் கூறினார்.

பிரதமருக்கு என் மூலமாகவே இந்த விஷயம் தெரிய வேண்டும் என்று நான் கருதியதால், முதலில் அதை அவரிடம் எடுத்துச்சென்று காட்டினேன். அதை அவர் அமைதியாக வாசித்தார்.

முதலில் அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை. ஆனால் அடுத்து திடீரென அவர் கேட்ட கேள்வி, நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்பதுதான். நான் சிறிது நேரம் இதைப்பற்றி யோசித்தேன். பின்னர் இந்த பிரச்சினையில் நீங்கள் ராஜினாமா செய்வது பொருத்தமானது என்று நான் கருதவில்லை என்று கூறினேன். அவருக்கு நான் நேர்மையான ஆலோசனையை வழங்கினேன் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story