டெல்லியில் பா.ஜனதா தோல்வி எதிரொலி பீகார் சட்டசபை தேர்தலில் தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும் ராம்விலாஸ் பஸ்வான் பரபரப்பு பேட்டி


டெல்லியில் பா.ஜனதா தோல்வி எதிரொலி பீகார் சட்டசபை தேர்தலில் தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும் ராம்விலாஸ் பஸ்வான் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 16 Feb 2020 10:45 PM GMT (Updated: 16 Feb 2020 9:35 PM GMT)

டெல்லி தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்துள்ள நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் தலைவர்கள் பேச்சில் கட்டுப்பாடு வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தோல்விக்கு, அதன் தலைவர்கள் ஆத்திரமூட்டும் வகையில் பேசியது காரணம் என கட்சித்தலைமை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த தருணத்தில், அடுத்து 243 இடங்களை கொண்டுள்ள பீகார் சட்டசபைக்கு அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

பீகாரில், தற்போது ஆளும் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணியில் பாரதீய ஜனதா, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி ஆகியவை உள்ளன. இந்த கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலையொட்டி ராம்விலாஸ் பஸ்வான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது கூறியதாவது:-

பாரதீய ஜனதா கூட்டணியில் லோக்ஜனசக்தி கட்சி வலுவாக உள்ளது. நிதிஷ் குமாரைப் பொறுத்தமட்டில் அவர் வேறு எங்கும் போவார் என்று நான் கருதவில்லை.

பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு யாரும் போக மாட்டார்கள்.

அங்கே எதிர்க்கட்சி கூட்டணி எப்படி இருக்கிறது? லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருக்கிறார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எஞ்சியுள்ள கட்சிகள் ஆளுக்கொரு விதமாக தாளம் போடுகின்றன. ஆக, அந்த கூட்டணிக்கு யார் போகப்போகிறார்கள்? அது மூழ்கிக்கொண்டிருக்கிற கப்பல்கூட இல்லை. ஏற்கனவே மூழ்கி விட்ட கப்பல். அவர்கள், அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பீகாரில் பாரதீய ஜனதா கூட்டணி உறுதியுடன் இருக்கிறது. எங்கள் கூட்டணிக்கு எந்த சவாலும் இல்லை. சட்டசபை தேர்தலில் மூன்றில் இருபங்கு இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்போம். நிதிஷ் குமார் கூட்டணிக்கு தலைமை தாங்குவார் என்று அமித் ஷா கூறி இருப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

டெல்லி தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் ஆத்திரம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டனர் என்கிறீர்கள். இதில் எங்கள் கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டார்.

தவிரவும் டெல்லியில் நடந்தது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என்பதை அமித்ஷாவும் ஒப்புக்கொண்டு விட்டார். எங்கள் கட்சிக்கு எதிராக யாரும் தேர்தல் கமிஷனிடம் போகவில்லை.

அரசியல் சாசன சட்ட பிரிவுகள் 370-ம், 35-ஏயும் ரத்தாகி விட்டன; முத்தலாக் தடை செய்யப்பட்டு விட்டது; ராமஜென்ம பூமி பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. இனி மாநில சட்டசபை தேர்தல்கள் உள்ளூர் பிரச்சினைகளின் அடிப்படையில் சந்திக்கப்பட வேண்டும். தேசிய அளவிலான தேர்தல்களைப் பொறுத்தமட்டில், நரேந்திர மோடிக்கு எந்த போட்டியும் இல்லை.

சமீபத்தில் நடந்த (டெல்லி) மாநில சட்டசபை தேர்தலில் உள்ளூர் வளர்ச்சி பிரச்சினைகளில்தான் கவனத்தை செலுத்த வேண்டும்; தலைவர்கள் பேச்சில் கட்டுப்பாடு பராமரிக்கப்பட வேண்டும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தலில் தலைவர்கள் பேச்சில் கட்டுப்பாடு கண்டிப்பாக வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் செய்த பணிகளை மனதில் கொண்டு, செயல்திறன் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்று பீகார் மக்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பீகார் சட்டசபை தேர்தலில் இட பங்கீடு சுமூகமாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story