காஷ்மீர் விவகாரம் ; ஐநா பொதுச்செயலாளர் யோசனையை நிராகரித்தது இந்தியா


காஷ்மீர் விவகாரம் ;  ஐநா பொதுச்செயலாளர் யோசனையை நிராகரித்தது இந்தியா
x
தினத்தந்தி 17 Feb 2020 4:47 AM GMT (Updated: 17 Feb 2020 7:29 AM GMT)

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறிய ஐநா பொதுச்செயலாளரின் யோசனையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீர் விவகாரத்தில்  மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ் யோசனையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு 4 நாட்கள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை  மந்திரி ஷா முகம்மது குரோஷியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், “  ஜம்மு காஷ்மீரில் தற்போது உள்ள சூழலும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நீடிக்கும் பதற்றமும்  தனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளேன். ஐநா மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் படி அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய ராஜ்யரீதியிலான நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே கருவியாக உள்ளது” என்றார். 

ஐநா பொதுச்செயலாளரின் கருத்து இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்  ரவீஷ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இவ்விவகாரம் பற்றி பேசிய போது, “ ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.  

ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இப்போதும் எப்போதும் இருக்கும். பாகிஸ்தானால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் பயங்கரவாதிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட பிரச்சினைகளை தான் தீர்க்க வேண்டும்.  மேற்கொண்டு ஏதேனும் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் இருதரப்பு மட்டுமே விவாதிப்போம். மத்தியஸ்தம் செய்வதில் மூனறாம் தரப்பு தலையீட்டுக்கு எந்த தேவையும் இல்லை” என்றார். 


Next Story