கோட்சே ஆதரவாளர்களுடன் இருக்கிறாரா? நிதிஷ்குமாருக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி


கோட்சே ஆதரவாளர்களுடன் இருக்கிறாரா? நிதிஷ்குமாருக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி
x
தினத்தந்தி 18 Feb 2020 11:34 AM GMT (Updated: 18 Feb 2020 11:34 AM GMT)

காந்திய சிந்தனையா அல்லது கோட்சே ஆதரவாளர்களுடன் இருக்கிறாரா என்பதற்கு கட்சி தலைவராக நிதிஷ்குமார் பதில் கூறவேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பாட்னா,

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் மற்றும் பீகார் முதல் மந்திரியான நிதிஷ்குமார் வெளிப்படையாக ஆதரவு வழங்கினார்.  ஆனால், இந்த சட்டங்களுக்கு எதிரான நிலை கொண்ட அக்கட்சியின் துணை தலைவராக இருந்து வந்த பிரசாந்த் கிஷோர் சட்டங்களுக்கு எதிராக பேசி வந்துள்ளார்.

இதற்கு கட்சியில் எதிர்ப்பு வலுத்தது.  அவர் நிதிஷ்குமாருக்கு எதிராக புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று கட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தொடர்ந்து கிஷோர் கட்சியில் இருந்து கடந்த ஜனவரி இறுதியில் நீக்கப்பட்டார்.

நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கைக்கு பிரதிபலித்த கிஷோர், பீகார் முதல் மந்திரியாக தொடர வாழ்த்துகள் என தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், நாட்டின் சிறந்த 10 மாநிலங்களில் ஒன்றாக பீகாரை உருவாக்கும் இலக்குடன் 'பாத் பீகார் கி' என்ற திட்டத்தினை கிஷோர் அறிவித்து உள்ளார்.  வருகிற 20ந்தேதி இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து கிஷோர் இன்று பேசும்பொழுது, காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் ராம் மனோகர் லோகியா ஆகியோரின் சிந்தனைகளை தன்னால் கைவிட முடியாது என நிதிஷ் ஜி எப்பொழுதும் கூறி வருகிறார்.

அதேவேளையில், நாதுராம் கோட்சேவின் சிந்தனைகளுக்கு ஆதரவளிப்போருடன் எப்படி அவரால் இருக்க முடிகிறது.  இருவரும் ஒன்றாக பயணிக்க முடியாது.  நீங்கள் பா.ஜ.க.வுடன் இருக்க விரும்பினால், அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  ஆனால், நீங்கள் இரு பக்கமும் இருக்க முடியாது.  இதுபற்றி எனக்கும், நிதிஷ் ஜிக்கும் இடையே நிறைய விவாதங்கள் நடந்து உள்ளன.  அவருக்கும், எனக்கும் உள்ள எண்ணங்கள் வேறுபட்டவை.

கோட்சே மற்றும் காந்தி ஆகியோரின் சிந்தனைகள் ஒன்றாக இணைந்து செயல்பட முடியாது.  அதனால் காந்திய சிந்தனைகளுடன் நீங்கள் இருக்கிறீர்களா அல்லது கோட்சேவுக்கு ஆதரவு அளிப்பவர்களுடன் இருக்கிறீர்களா? கட்சியின் தலைவர் என்ற முறையில், எந்த பக்கம் இருக்கிறீர்கள் என்பது பற்றி நீங்களே சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story