குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு ஜனாதிபதியுடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் சந்திப்பு மு.க.ஸ்டாலின் கடிதத்தை வழங்கினர்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு   ஜனாதிபதியுடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் சந்திப்பு   மு.க.ஸ்டாலின் கடிதத்தை வழங்கினர்
x
தினத்தந்தி 20 Feb 2020 12:00 AM GMT (Updated: 20 Feb 2020 12:00 AM GMT)

தி.மு.க. கூட்டணி தலைவர்கள் நேற்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்கள்.

புதுடெல்லி,

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் கையெழுத்து இயக் கம் நடத்தப்பட்டது. ஒரு வாரகாலமாக நடைபெற்ற இந்த இயக்கம் மூலம் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த கையெழுத்து படிவங்கள் அனைத்தும் 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்த நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினார்கள். அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதிக்கு எழுதிய 6 பக்க கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது.

அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது:-

நெறிமுறைக்கு எதிரானது

குடியுரிமையை மதத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கை நமது நாட்டின் மதச்சார்பற்ற நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்தியாவில் வாழும் மக்களை அது பிளவுபடுத்துவதாக உள்ளது. இந்த சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கும் கடும் அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. எனவே, தேசிய நலன் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து இந்தியர்களுக்கும் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதில் 2 கோடிக்கும் மேல் கையெழுத்துக்கள் பெறப்பட்டு உள்ளன. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் முடிவை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

போராடும் உரிமை

ஜனாதிபதியை சந்தித்து பேசிய பின் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறுகையில், “ஜனாதிபதியுடனான எங்கள் சந்திப்பு 20 நிமிடம் நடந்தது. நாங்கள் சொல்லவேண்டிய கருத்துகளை சொல்லி விட்டோம். இதுபற்றி கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக ஜனாதிபதி சொல்லி இருக்கிறார். அத்துடன் தமிழக மக்களுக்கு அவரது வணக்கத்தையும் சொல்லச் சொன்னார். மக்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. அதை அமைதியாக நடத்துங்கள் என்று அவர் சொல்லி இருக்கிறார்” என்றார்.

வைகோ கூறும் போது, “தமிழக மக்களின் ஏகோபித்த அபிப்ராயத்தை கொண்டு வந்து தந்து இருக்கிறோம். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அவர்களாகவே வந்து கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். தமிழக மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்” என்று ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக கூறினார்.

திருமாவளவன் கூறுகையில், “ஜனாதிபதியுடனான சந்திப்பு ஆறுதலாக இருந்தது” என்றார்.

Next Story