'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி ஹூஸ்டனில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி போல் இருக்கும் - வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்


இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் படம்:REUTERS
x
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் படம்:REUTERS
தினத்தந்தி 20 Feb 2020 12:28 PM GMT (Updated: 20 Feb 2020 12:28 PM GMT)

'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி ஹூஸ்டனில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி போல் இருக்கும் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.  டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார்.  வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார்.  அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்று விருந்து வழங்கி கவுரவித்த டிரம்ப், ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றார்.  இதில், இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இதனை நினைவுப்படுத்தும் வகையில் டிரம்ப் வருகையையொட்டி 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை நடத்துவது என இந்தியா சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.  

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்  கூறியதாவது:- 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்காக குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற உள்ள ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி  கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹூஸ்டனில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்வுக்கு ஒத்ததாக இருக்கும்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வருகைக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், இது எங்கள் உலகளாவிய  உறவுகளை வலுப்படுத்தும் என கூறினார்.

Next Story