டெல்லி திகார் சிறையில் நிர்பயா கொலை குற்றவாளி சுவரில் தலையை முட்டிக் கொண்டு காயம் மனநல சிகிச்சை அளிக்க கோர்ட்டில் வக்கீல் கோரிக்கை


டெல்லி திகார் சிறையில்   நிர்பயா கொலை குற்றவாளி சுவரில் தலையை முட்டிக் கொண்டு காயம்   மனநல சிகிச்சை அளிக்க கோர்ட்டில் வக்கீல் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2020 11:09 PM GMT (Updated: 20 Feb 2020 11:09 PM GMT)

நிர்பயா கொலை குற்ற வாளி டெல்லி திகார் சிறை யில் சுவரில் தலையை முட்டிக் கொண்டு காயம் அடைந்த தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மனநல சிகிச்சை அளிக்க அவரது வக்கீல் கோர்ட்டில் கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி, 

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் ஜெயிலில் 3-வது எண் சிறையில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு, ஜனாதிபதிக்கு கருணை மனு என்று அவர்கள் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால், அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது இரு முறை தள்ளி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், அவர்கள் 4 பேரையும் வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட உத்தரவிட்டு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு கடந்த 17-ந் தேதி புதிய மரண வாரண்டை பிறப்பித்தது. இதனால் அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

மரண பயத்தில் வினய் சர்மா

அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க சிறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 4 பேரின் உடல்நிலையையும் டாக்டர்கள் தினசரி பரிசோதித்து வருகிறார்கள்.

குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா மரண பயத்தில் தவித்து வருகிறார். சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்த அவர், பின்னர் சிறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் மீண்டும் சாப்பிட தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவரை உரிய முறையில் கவனித்துக் கொள்ளுமாறு சிறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

சுவரில் முட்டிக் கொண்டார்

இந்தநிலையில் வினய் சர்மா தனது அறையில் சுவரில் முட்டிக் கொண்டதும், அதில் அவர் காயம் அடைந்த தகவலும் வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அப்போது வினய் சர்மா சுவரில் தலையை ஓங்கி முட்டிக் கொண்டதை பார்த்த சிறை அதிகாரி ஒருவர் ஓடிச் சென்று அவரை தடுத்து நிறுத்தினார். உடனே சிறையில் உள்ள டாக்டர்களை அழைத்து வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை திகார் சிறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

வக்கீல் கோரிக்கை

வினய் சர்மாவின் வக்கீல் ஏ.பி.சிங் நேற்று கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் இதுதொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், வினய் சர்மா சிறையில் தாக்கப்பட்டதாகவும், இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாவும் கூறினார். இதுபற்றிய தகவல் கிடைத்து தானும், வினய் சர்மாவின் தாயாரும் சிறைக்கு சென்று பார்த்த போது அவரால் தங்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் அவரது மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்றும் கூறினார். வினய் சர்மாவுக்கு மனநல சிகிச்சை மற்றும் தலை, கையில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு வக்கீல், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறினார்.

நீதிபதி நிராகரிப்பு

இதைத்தொடர்ந்து வினய் சர்மா வக்கீலின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இதே பிரச்சினை முன்பு சுப்ரீம் கோர்ட்டில் எழுப்பப்பட்ட போது, வினய் சர்மாவின் மனநிலை நன்றாக இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுவதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர் என்பதை அப்போது அவர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் இந்த மனுவுக்கு சனிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி தர்மேந்திர ராணா உத்தரவிட்டார்.

Next Story