கொரோனா வைரஸ்: இந்தியாவின் உதவியை ஏற்பதை தள்ளிப்போடும் சீனா - வெளிநாடுகளிலும் உயிர்ப்பலி அதிகரிப்பு


கொரோனா வைரஸ்: இந்தியாவின் உதவியை ஏற்பதை தள்ளிப்போடும் சீனா - வெளிநாடுகளிலும் உயிர்ப்பலி அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2020 11:00 PM GMT (Updated: 22 Feb 2020 9:47 PM GMT)

சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துவிட்ட நிலையிலும், இந்த பேரிடருக்கு உதவ முன்வந்துள்ள இந்தியாவின் விருப்பத்தை வேண்டுமென்றே அந்த நாடு தள்ளிப்போட்டு வருகிறது.

புதுடெல்லி,

சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா பலி எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துள்ளது. இதைப்போல 76,288 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11,477 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கும் சீனாவில் உலக சுகாதார அமைப்பை சேர்ந்த வல்லுனர்கள் தொடர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பரவலை தடுப்பதற்காக சீன மருத்துவத்துறைக்கு உதவி வரும் இவர்கள், மருத்துவ பணிகளுக்கும் உதவி வருகின்றனர்.

கடந்த 17-ந்தேதி சீனாவுக்கு சென்றுள்ள 12 பேர் கொண்ட இந்த குழுவினர், அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். வைரசின் பிறப்பிடமான ஹுபெய் மாகாணத்துக்கு செல்ல அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தடையை அரசு பின்னர் நீக்கியது. அதன்படி நேற்று அவர்கள் ஹுபெய் மாகாணம் மற்றும் உகான் நகரம் போன்ற பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் தற்போது குறைந்திருந்தாலும், அது இன்னும் உச்சநிலையை எட்டவில்லை என சீன அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார். ஹுபெயின் நிலவரம் தொடர்ந்து கவலையளிப்பதாகவே இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா பேரிடரில் சிக்கியிருக்கும் சீனாவுக்கு உதவுவதற்கு இந்தியா முன்வந்திருந்தது. முக கவசம், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்க முடிவு செய்தது.

இதற்காக விமானப்படையின் மிகப்பெரிய போக்குவரத்து விமானமான குளோப்மாஸ்டர் ஒன்று உதவிப்பொருட்களுடன் தயாராக உள்ளது. இந்த பொருட்களை சீனாவில் கொண்டு சேர்த்துவிட்டு, அங்கு உகான் போன்ற நகரங்களில் கொரோனா பீதியில் வசித்து வரும் இந்தியர்களை அந்த விமானத்தில் மீட்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த விமானத்துக்கு அனுமதி வழங்காமல் சீனா தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் உதவியை ஏற்பதை சீனா வேண்டுமென்றே தள்ளிப்போடுவதாக மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறினார். மேற்படி மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிலேயே தட்டுப்பாடு உள்ள நிலையிலும், சீனாவுக்கு உதவும் நோக்கில் அனுப்பி வைக்க முன்வந்தும், அதை ஏற்க சீனா தாமதிப்பதாக அவர் கூறினார்.

அதேநேரம் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகள் சீனாவுக்கு உதவிப்பொருட்களை வழங்கிவிட்டு, அந்த விமானங்களிலேயே தங்கள் நாட்டு மக்களை அழைத்து சென்று வருகின்றன. இதற்கு அனுமதி அளித்திருக்கும் சீனா, இந்தியாவுக்கு மட்டும் இத்தகைய அனுமதியை மறுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் தற்போது உயர தொடங்கி உள்ளது. அந்தவகையில் தென்கொரியாவில் நேற்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இவரையும் சேர்த்து அங்கு பலி எண்ணிக்கை 2 ஆனது. இங்கு சீனாவுக்கு அடுத்தபடியாக மிகவும் அதிகபட்சமாக 433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இத்தாலியில் முதல் பலியாக 78 முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் வடக்கு பிராந்தியத்தில் பொது இடங்கள் மூடப்பட்டு, விளையாட்டு, வழிபாடு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதைப்போல ஈரானில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கும் நேற்று ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் 28 ஆனது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.


Next Story