தேசிய செய்திகள்

2 நாள் பயணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார் + "||" + US President Trump Visits India Today - Prime Minister Modi welcomes

2 நாள் பயணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்

2 நாள் பயணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்
இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக இன்று ஆமதாபாத் வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். டிரம்பின் வருகையை யொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஆமதாபாத்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சுற்றுப்பயணத்தையொட்டி, உலக நாடுகள் அனைத்தின் பார்வையும் இந்தியா மீது படிந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் டிரம்ப், இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) வருகிறார். இதன் மூலம் ஒபாமாவைத் தொடர்ந்து, தனது முதல் பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு வருகிற 2-வது ஜனாதிபதி என்ற பெருமையை டிரம்ப் பெறுகிறார்.


அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ், வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் ஆகியோரும் வருகின்றனர்.

வாஷிங்டன் நகரில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் நேற்று புறப்பட்ட டிரம்ப், இன்று (திங்கட்கிழமை) நண்பகலில் ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் வந்து டிரம்ப் தம்பதியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்.

டிரம்ப் வருகைக்காக ஆமதா பாத் நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வரவேற்பு தட்டிகள், சுவரோவியங்கள், அலங்கார வளைவுகள் காணப்படுகின்றன.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், மகாத்மா காந்தியின் வாழ்விலும், சுதந்திர போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்த சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 22 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து டிரம்புக்கு ஆரவார வரவேற்பு அளிக்கிறார்கள். வழியில் 30-க்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இந்தியாவின் கலாசாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றை டிரம்ப் தம்பதியர் கண்டு ரசிக்க உள்ளனர்.

பின்னர் ஆமதாபாத்தில் மோட்டேரா பகுதியில் விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ என்னும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்கிற இந்த நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

முன்னதாக பிரபல பாடகர் கைலாஷ் கெர் மற்றும் எண்ணற்ற கலைஞர்கள் கலந்துகொள்கிற கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது, ஹூஸ்டன் நகரத்தில் என்.ஆர்.ஜி. மைதானத்தில் நடந்த ‘மோடி நலமா?’ (ஹவ்டி மோடி) நிகழ்ச்சியைப் போன்றது இந்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிகளையொட்டி ஆமதாபாத் நகரில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, அந்த நகரமே பாதுகாப்பு அரண்போல மாற்றப்பட்டுள்ளது

வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு பொறுப்பில் உள்ள அமெரிக்காவின் ரகசிய சேவை படையினரும், கருப்பு பூனை படையினரும் கழுகுப்பார்வையுடன் கண்காணிக்கிறார்கள். சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஆளில்லா விமானம் எதுவும் காணப்பட்டால் அதை தடுப்பதற்கு ஆளில்லா விமான தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தலைவர்கள் செல்கிற பாதைகளில் கருப்பு பூனை படையின் துப்பாக்கி சூடு தடுப்பு சிறப்பு பிரிவும் இருக்கும்.

ஆமதாபாத் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலையில் டிரம்ப் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலை பார்வையிடச் செல்கிறார்.

டிரம்ப் வருகையையொட்டி மத்திய உள்துறை மந்திரியும், குஜராத் கிரிக்கெட் சங்க தலைவருமான அமித்ஷா நேற்று ஆமதாபாத் சென்றார்.

அவர் நேராக சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, தக்க ஆலோசனைகள் வழங்கினார். பாடகர் கைலாஷ் கெர் உள்ளிட்டோர் வழங்கக்கூடிய கலை நிகழ்ச்சிகள் பற்றியும் கேட்டறிந்தார்.

ஆமதாபாத்தில் இருந்து ஆக்ரா விமான நிலையம் வந்து சேரும் டிரம்புக்கு, தாஜ்மகாலுக்கு செல்லும் வழி நெடுக (சுமார் 12 கி.மீ. தொலைவு) பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளிக்கிறார்கள். வழியெங்கும் சிறப்பு கலை நிகழ்ச்சிகளையும் கலைஞர்கள் நடத்துகிறார்கள்.

ஆக்ராவில் டிரம்ப் தம்பதியரை வரவேற்று நகரின் பல இடங்களிலும் பதாகைகளும், தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. தாஜ்மகால் அருகே வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட வரவேற்பு தட்டியில் ஜனாதிபதி டிரம்ப், மெலனியா டிரம்ப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

1350 மில்லியன் (135 கோடி) இந்திய மக்கள் சார்பில் அவர்களை வரவேற்பதாக வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

‘அமெரிக்க ஜனாதிபதியே, கிருஷ்ணரின் பூமிக்கு வருக’ என்பது போன்ற வாசகங்களுடனும் வரவேற்பு தட்டி வைக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலை பார்வையிடும் டிரம்ப், அங்கு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

பின்னர் ஆக்ராவில் இருந்து உடனே டெல்லிக்கு செல்கிறார். டிரம்பின் வருகையையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இரவில் அங்குள்ள ஐ.டி.சி. மவுரியா நட்சத்திர ஓட்டலில் டிரம்ப் தம்பதியர் தங்குகிறார்கள். இதற்காக இந்த ஓட்டல் அமைந்துள்ள பகுதி, உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் அமெரிக்காவின் ரகசிய சேவை படையினர், இந்தியாவின் கருப்பு பூனை படையினர் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.

அடுக்குமாடி கட்டிடங்களின் உச்சியில் ஆளில்லா விமான தடுப்பு பிரிவினர், குறிபார்த்து சுடும் வீரர்கள், அதிரடிப்படை கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

ஆயிரக்கணக்கான மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஐ.டி.சி. மவுரியா ஓட்டல் அமைந்துள்ள சர்தார் படேல் மார்க் பகுதியில் துல்லியமாக பதிவு செய்கிற ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் டிரம்ப் செல்கிற பாதைகளில் எல்லாம் நாசவேலை தடுப்பு பிரிவினர் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அதையொட்டி அமைந்துள்ள தாஜ்பேலஸ் ஓட்டல் பகுதியும் பலத்த பாதுகாப்பு, கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா-அமெரிக்கா இடையே இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்பு துறை, இரு தரப்பு உறவு உள்ளிட்டவை சார்ந்ததாக இருக்கும். வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

இரவில் ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப் தம்பதியருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து டிரம்ப் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் புறப்படுகிறார்.

இந்தியாவுக்கு இன்று வருவதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், “இந்தியாவில் என் சிறந்த நண்பர்களுடன் இருக்கப்போவதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்” என கூறி உள்ளார்.

இதே போன்று பிரதமர் மோடி, டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வரவேற்க இந்தியா மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது. நாளை (இன்று) ஆமதாபாத்தில் நடக்கப்போகிற வரலாற்றுச்சிறப்புமிக்க நிகழ்வுடன் அவர் நம்மோடு இருப்பது நமக்கு கவுரவம்” என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2 நாள் பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 2 நாள் பயணமாக நாளை (புதன் கிழமை) இந்தியா வருகிறார்.