இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம்-டொனால்டு டிரம்ப்


படம்: ANI
x
படம்: ANI
தினத்தந்தி 24 Feb 2020 9:59 AM GMT (Updated: 24 Feb 2020 9:59 AM GMT)

இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம் என நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் கூறினார்.

அகமதாபாத் 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இந்தியாவுக்கு வருகை தந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது  மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் சபர்மதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். குரங்கு பொம்மைகள் சொல்லும் பாடம் குறித்து ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிரதமர் மோடி  விளக்கினார்.  காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப்.  

பின்னர் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்திற்கு சென்றார் ஜனாதிபதி  டிரம்ப்.  அவர்கள்  வந்த  வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். 

நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்  நமஸ்தே  என தனது பேச்சை தொடங்கினார். அவர் கூறியதாவது:-

கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு.

பாலிவுட் படங்கள், பங்க்ரா மற்றும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே  மற்றும் ஷோலே போன்ற கிளாசிக் படங்களைப் பார்த்து  உலகமெங்கும் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்கள்.விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர்.

எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, இந்தியாவுக்கு இந்த உலகத்தில்  மிகச் சிறந்த மற்றும் மிகவும் அச்சமுள்ள சில இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது.

தெற்காசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை குறைந்து உள்ளது. 

இதுவரை  மிகப் பெரிய ஆயுதங்களை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் சிறந்ததைச் செய்கிறோம், இப்போது நாங்கள் இந்தியாவுடன் அதனை கையாள்கிறோம்.இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம்.

பாதுகாப்பு துறையில் நாளை எங்கள் பிரதிநிதிகள் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுடன் நாளை 20 ஆயிரம் கோடி  ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

டைகர் டிரயல்' என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடைபெறும். ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கப்பல் கட்டுவதில் இந்தியாவுக்கு  ஒத்துழைப்பு அளிப்போம். விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும்.

எல்லைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு. பயங்கரவாதத்திற்கு எதிராக   இந்தியாவுடன் அமெரிக்க இணைந்து செயல்படும். இஸ்லாமிய பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பை அமெரிக்கா ஒடுக்கி உள்ளது. தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்தியா நல்ல தலைமையை கொண்டுள்ளது.பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருகிறேன் என கூறினார்.

Next Story