அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 25 Feb 2020 4:43 AM GMT (Updated: 25 Feb 2020 4:43 AM GMT)

டெல்லி வன்முறை: அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என ராகுல்காந்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று  ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.  

வடகிழக்கு டெல்லியின் யாஃபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு தலைமைக்காவலர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.  60-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்தில் வாலிபர் ஒருவர்  வானத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். மேலும், காவல் துறையினரையும், சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த அந்த நபர் மிரட்டினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. 

இதையடுத்து, கைத்துப்பாக்கியுடன் வலம் வந்த அந்த நபர் யார் என போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஷாரூக் என்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 33 வயது கொண்ட தாடி வைத்து காணப்படும் இந்த நபருக்கு துப்பாக்கி எப்படி வந்தது ?  பயங்கரவாத அமைப்புகளுடன் இவருக்கு  தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வடகிழக்கு டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை மூடப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா டுவீட் செய்துள்ளார்.

அமைதியான போராட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார், 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது :-

 அமைதியான போராட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. 

"டெல்லியில் நடைபெற்ற வன்முறை கவலைக்குரியது, சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும் ... டெல்லி  மக்கள் எந்தவிதமான ஆத்திரமூட்டல்களைப் பொருட்படுத்தாமல் நிதானத்தையும், இரக்கத்தையும், புரிந்துணர்வையும் கடைபிடிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

Next Story