டிரம்ப் - சி.என்.என். செய்தியாளர் கடும் வாக்குவாதம்


டிரம்ப் - சி.என்.என். செய்தியாளர் கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 25 Feb 2020 8:53 PM GMT (Updated: 25 Feb 2020 8:53 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கும், சி.என்.என். செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது சி.என்.என். தொலைக்காட்சி செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த வெளிநாட்டு தலையீட்டையும் நிராகரிப்பதாக உறுதியளிக்க முடியுமா? என்றும் உளவுத்துறை அனுபவம் இல்லாதவரை தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமித்தது குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு டிரம்ப், “எனக்கு எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை, எந்த நாடும் எனக்கு உதவி செய்யவும் இல்லை” என்றார்.

சி.என்.என். சமீபத்தில் தவறான தகவல் தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்டதையும் டிரம்ப் நினைவூட்டினார். அதற்கு அகோஸ்டா உடனடியாக, “சில சமயம் உங்களைவிட நாங்கள் சிறப்பாக உண்மை தகவல்களை தெரிவிக்கிறோம்” என்றார். இந்த தொடர் வாக்குவாதத்தில் டிரம்ப், சி.என்.என். ஒளிபரப்பு மிகவும் மோசமானது என்ற பெயரை எடுத்துள்ளது என்று கூறியதுடன், அதன் நேர்மை பற்றியும் கேள்வி எழுப்பினார். இந்த மோதல் பேட்டியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

டிரம்பும், அகோஸ்டாவும் கடந்த காலங்களிலும் பலமுறை பேட்டிகளில் மோதியுள்ளனர். 2018-ம் ஆண்டு அகோஸ்டாவை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாதபடி அவரது பத்திரிகையாளர் அனுமதி ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்து மீண்டும் அனுமதி பெற்றார்.


Next Story