தாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன? - சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்கள்


தாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன? - சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்கள்
x
தினத்தந்தி 25 Feb 2020 9:52 PM GMT (Updated: 25 Feb 2020 9:52 PM GMT)

தாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன என்பது குறித்து சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்கள் தெரிவித்துள்ளார்.

ஆக்ரா,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தன் மனைவி மெலனியாவுடன் நேற்று முன்தினம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு சென்றார். அவருக்கு ஆக்ராவை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி நிதின் குமார் என்பவர், தாஜ்மகாலை சுற்றிக் காண்பித்ததுடன், அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார்.

இதற்கிடையே, தாஜ்மகாலில் டிரம்புடன் ஏற்பட்ட அனுபவங்களை நிதின் குமார் நேற்று பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

தாஜ்மகாலின் அழகை பார்த்தவுடன், டிரம்புக்கும், அவருடைய மனைவி மெலனியாவுக்கும் முதலில் பேச்சே வரவில்லை. டிரம்ப் முதலில் பேசிய வார்த்தைகள் “நம்பவே முடியவில்லை” என்பதுதான். தாஜ்மகாலின் கதையையும், அதன் கட்டுமானம் உள்ளிட்ட பின்னணி தகவல்களையும் நான் கூறியபோது இருவரும் ஆர்வமாக கேட்டனர். அந்த தகவல்கள் அவர்களை கவர்ந்தன.

ஷாஜகான், தன் சொந்த மகன் அவுரங்க சீப்பால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதையும், இறந்த பிறகு, மனைவி மும்தாஜ் கல்லறை அருகிலேயே அவரது உடல் புதைக்கப்பட்டதையும் கேள்விப்பட்டு டிரம்ப் உணர்ச்சிவசப்பட்டார்.

களிமண் சிகிச்சை குறித்து மெலனியா கேட்டார். அதை நான் விவரித்தபோது, மெலனியா ஆச்சரியம் அடைந்தார் என்று நிதின் குமார் கூறினார்.

டிரம்புக்கு சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்ட தகவலை அறிந்து, நிதின் குமாருடன் ஏராளமானோர் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். அவர் ஒரே நாளில் பிரபலம் அடைந்து விட்டார்.


Next Story