6 எம்.பி.க்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் 26-ந் தேதி தேர்தல்: அ.தி.மு.க - தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பு


6 எம்.பி.க்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் 26-ந் தேதி தேர்தல்: அ.தி.மு.க - தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 25 Feb 2020 11:15 PM GMT (Updated: 25 Feb 2020 10:41 PM GMT)

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் (மார்ச்) 26-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

அ.தி.மு.க - தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய நாடாளுமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அடுக்காக செயல்படுகிறது.

மக்களவையின் 545 உறுப்பினர்களில் 543 பேர் பொதுத்தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 250. இதில் 12 பேரை ஜனாதிபதி நேரடியாக நியமிக்கிறார். கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில் மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவர்கள் போக மீதமுள்ள அத்தனை பேரையும் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள். சட்டசபையில் கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப மாநிலங்களவை பதவி கிடைக்கும்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் எம்.எல்.ஏ.க் களால் தேர்ந்து எடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து 18 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா (பா.ஜனதாவில் இணைந்துள்ளார்), தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதைப்போல மராட்டிய மாநிலத்தில் 7, மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் தலா 5, ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் ஒடிசாவில் தலா 4, அசாம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 3, தெலுங் கானா, சத்தீஷ்கார், அரியானா மற்றும் ஜார்கண்டில் தலா 2, இமாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் தலா 1 என மொத்தம் 55 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.

காலியாகும் இந்த பதவிகளில் புதிய உறுப்பினர்களை ஏப்ரல் மாதமே நியமித்தாக வேண்டும். இதனை முன்னிட்டு, 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இது குறித்து தேர்தல் கமிஷன் செயலாளர் பிரமோத் குமார் ஷர்மா கூறியிருப்பதாவது:-

மார்ச் 26-ந் தேதி (வியாழக் கிழமை) மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற் கான வேட்புமனு தாக்கல் மார்ச் 6-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. 16-ந் தேதி (திங்கட்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 18-ந் தேதி ஆகும்.

தேர்தல் ஓட்டுப்பதிவு 26-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது. பதிவான ஓட்டுகள் அன்று மாலை 5 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மார்ச் 30-ந் தேதிக்குள் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

இந்த தேர்தலில் வாக்குச்சீட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படும். அதில், யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவருக்கு எதிரான கட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அளிக்கும் வயலட் வண்ண ஸ்கெட்ச் பேனாவால் மட்டுமே குறியீடு செய்ய வேண்டும். வேறு பேனாக்களை பயன்படுத்தி குறியீடு செய்யக்கூடாது.

தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதற்காக அதை உன்னிப்பாக கவனிக்கும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன. இதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. வுக்கு 125 எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 100 மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒன்று என 108 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. சுயேச்சையாக உள்ளார் (டி.டி.வி.தினகரன்).

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு டெல்லி மேல்சபை எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். அந்த வகையில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் தலா 3 எம்.பி.க்கள் போட்டியில்லாமல் எளிதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தரப்பில் தலா 3 பேர் என்ற வகையில் மொத்தம் 6 பேர் மட்டும் களத்தில் நிறுத்தப்படும்போது வாக்குப்பதிவு நடக்க வாய்ப்பில்லை.


Next Story