தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி + "||" + Citizenship Amendment Act: India's Internal Affairs - Trump Interview

குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி

குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்று தெரிவித்ததுடன், அது இந்தியாவின் விவகாரம் என்றார்.
புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது இரண்டு நாள் இந்திய சுற்றுப்பயணத்தால் நாட்டின் 135 கோடி மக்களின் கவனத்தையும் கவர்ந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் சிறப்பு, டிரம்ப் முழுக்க முழுக்க இதை இந்திய சுற்றுப்பயணமாக அமைத்துக்கொண்டதாகும். அவர் நேரடியாக வாஷிங்டனில் இருந்து இந்தியா வந்து, இங்கிருந்து வாஷிங்டனுக்கு திரும்புகிறார்.


அவர் நேற்று முன்தினம் குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கு ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் வந்து தரை இறங்கினார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர், அந்த நாட்டின் நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் உள்ளிட்டோர் அடங்கிய உயர் மட்ட குழுவினரும் வந்தனர்.

பிரதமர் மோடி, விமான நிலையத்துக்கு வந்து டிரம்பை நேரில் வரவேற்றதும், அதைத் தொடர்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தியின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் தம்பதியர் சென்றதும், அங்கு அவர்கள் ராட்டையில் நூல் நூற்க முயற்சித்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள் ஆயின.

அதைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்று கருதப்படுகிற சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ பிரமாண்ட நிகழ்ச்சியில் டிரம்ப், மெலனியா தம்பதியர் கலந்து கொண்டதும், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று சிறப்பித்ததும் வரலாற்று நிகழ்வாகி உள்ளது.

இதில் டிரம்பும், மோடியும் பங்கேற்று பேசிய பேச்சு அவர்களிடையேயான தனிப்பட்ட நட்பின் மகத்துவத்தையும், இந்தியா, அமெரிக்கா என்னும் உலகின் சிறந்த ஜனநாயக நாடுகளின் நட்புறவின் மேன்மையையும் பதிவு செய்வதாக அமைந்தன.

அதன்பின்னர் டிரம்ப் தம்பதியர், ஆக்ராவுக்கு சென்றார்கள். அங்கு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிட்டு, அதன் அழகிலும், கட்டிடக்கலையின் மாண்பிலும் சொக்கிப் போனார்கள். அங்கு அவர்கள் படமும் எடுத்துக் கொண்டனர். இதேபோன்று, டிரம்பின் மகள் இவான்கா, மருமகன் குஷ்னர் தம்பதியரும் தாஜ்மகாலை கண்டு, ரசித்து மனம் மகிழ்ந்தனர்.

அதைத் தொடர்ந்து டிரம்ப், மெலனியா தம்பதியர் டெல்லிக்கு சென்றனர். அங்கு ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் தங்கினர்.

நேற்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப் தம்பதியருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதை டிரம்ப் ஏற்றுக் கொண்டார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சுகாதார மந்திரி ஹர்சவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதையடுத்து 10.30 மணிக்கு டிரம்ப், மெலனியா தம்பதியர் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் ஐதராபாத் இல்லத்தில் டிரம்ப், பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் ரூ.21 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆயின.

அடுத்த நிகழ்வாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிற குடியுரிமை திருத்த சட்ட விவகாரம், மத சுதந்திரம், டெல்லி வன்முறை, பாகிஸ்தான் பயங்கரவாதம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் சார்ந்த கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர்.

அவற்றுக்கு டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது:-

இந்தியாவில் இருந்த 2 நாட்களும் சிறப்பான நாட்கள், அற்புதமான நாட்கள். நான் சர்ச்சைக்கு உரிய விஷயங்களுக்குள் போக விரும்பவில்லை. ஏனென்றால், அத்தகைய ஒரு கேள்விக்கு பதில் அளித்து, 2 நாட்கள் பயணத்தில் ஒரு அடி விழ விரும்பவில்லை.

ஒரே ஒரு எளிய கேள்வியை கேட்பீர்கள். பதிலை வெளியே கொண்டு வருவீர்கள். அது பயணத்தையே முடித்து விடும். அப்புறம், நீங்கள் என் பயணத்தைப் பற்றி பேச மாட்டீர்கள். எனவே நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால், சொல்கிறேன். நான் என் பதில்களில் மிகவும் கவனமாக இருப்பேன்.

குடியுரிமை திருத்த சட்டத்தைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்திய அரசு, தனது மக்களுக் காக சரியான முடிவை எடுக் கும் என்று நான் நம்புகிறேன்.

இங்கு நடந்துள்ள வன்முறை சம்பவங்கள் பற்றி பிரதமர் மோடியுடன் விவாதித்தீர்களா என கேட்கிறீர்கள். தனிப்பட்ட தாக்குதல்கள் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.

பாகிஸ்தான் பற்றி பிரதமர் மோடியுடன் பேசினேன்.

காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மிகப்பெரிய பிரச்சினை ஆகும். நான் இதில் சமரசம் செய்ய முடியும் என்றால் சமரசம் செய்ய தயார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறார்.

பிரதமர் மோடியுடனான விரிவான பேச்சு வார்த்தையின்போது, நான் மத சுதந்திரம் பற்றி விரிவாக விவாதித்தேன். மக்களுக்கு மத சுதந்திரம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்.

நீங்கள் திரும்பி பார்த்தீர்களேயானால், மத சுநத்திரத்துக்காக இந்தியா அரும்பாடுபட்டிருக்கிறது.

முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதாகவும் பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார்.

இந்தியா எங்களிடம் இருந்து ஏராளமான ராணுவ தளவாடங்களை வாங்கிக்கொண்டிருக்கிறது.

வர்த்தகத்தை பொறுத்தமட்டில் இந்தியா (அமெரிக்காவுக்கு) அதிக வரிகளை விதிக்கிற நாடாக இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு அதிகபட்ச வரி விதிக்கிறது.

அமெரிக்கா நியாயமாக நடத்தப்படவேண்டும்.

தலீபான்களுடனான ஒப்பந்தம் பற்றியும் பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். அந்த ஒப்பந்தம் நிறைவேறுவதை இந்தியா பார்க்கும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தனது ஆதிக் கத்தை செலுத்த முயற்சிக்கிறதா என்று கேட்டால், அதற் கான பதில், உளவு அமைப்புகள் அது குறித்த தகவல்களை என்னிடம் ஒருபோதும் பகிர்ந்து கொண்டது இல்லை என்பதுதான் என்று டிரம்ப் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. "உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்” ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது.
3. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
4. கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்படும் சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானை கழற்றிவிட்டது
கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானை கழற்றிவிட்டது.
5. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.