ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 24 பேர் பலி


ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 24 பேர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2020 8:08 AM GMT (Updated: 26 Feb 2020 7:54 PM GMT)

ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 24 பேர் பலியானார்கள்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பூன்டி மாவட்டத்தில் கோட்டா-தவுசா நெடுஞ்சாலையில் கோட்டாவில் இருந்து சவாய் மாதோபூரை நோக்கி திருமண கோஷ்டியினர் 28 பேரை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதிகாலையில் அந்த பஸ் லேகாரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாப்டி கிராமத்திற்கு அருகே ஒரு பாலத்தில் சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடியது. பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் அந்த பஸ் மேஜ் ஆற்றில் கவிழ்ந்து விழுந்து மூழ்கியது.

விபத்து நடந்த இடத்திலேயே தண்ணீரில் மூழ்கி 13 பேர் பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த பிறகு மீட்பு படையினர் அப்பகுதி கிராம மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்த 15 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்களில் 11 பேர் வழியிலேயே இறந்தனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் 11 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் ஆவர்.

காயமடைந்த மேலும் 4 பேர் லேகாரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்தார்.

Next Story