டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது - அஜித் தோவல்


டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது - அஜித் தோவல்
x
தினத்தந்தி 26 Feb 2020 1:38 PM GMT (Updated: 26 Feb 2020 1:38 PM GMT)

டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வடகிழக்கு டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று  நேரில்  சென்று ஆய்வு செய்தார்.  அங்கு போராட்டக்காரர்களுடன் அவர் உரையாடினார். உங்களுடன் அரசு இருக்கிறது, எதற்கும் பயப்படாதீர்கள் என்று அவர்களுக்கு தைரியம் கூறினார்.

அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. காவல்துறை இங்கே தனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை மந்திரி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் நான் இங்கு வருகை தந்துள்ளேன். அல்லாஹ்வின் விருப்பப்படி (இன்ஷா அல்லா) இங்கே முழுமையான அமைதி இருக்கும். 

மக்களிடையே ஒற்றுமை உணர்வு இருக்கிறது, பகை இல்லை. ஒரு சில சமூக விரோதிகள் இது போன்ற செயல்களைச் செய்கிறார்கள் (வன்முறையை பரப்புகிறார்கள்), மக்கள் அவர்களை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

அப்போது பர்தா அணிந்தபடி ஒரு முஸ்லிம் இளம் பெண் பேட்டியின் நடுவே குறிக்கிட்டு, அவரிடம் சென்று பேச வேண்டும் என்று தெரிவித்தார்.  இதையடுத்து தோவலும், கூறுங்கள் என்று தெரிவித்தார்.

அந்தப் பெண் தன்னை ஒரு கல்லூரி மாணவி என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அங்கு தொடர்ந்து கலவரம் நடப்பதாகவும், அதனால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை, உணர்வதாகவும், உதவிக்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை என்றும் தெரிவித்தார். 

அப்போது அந்தப் பெண்ணிடம் பேசிய அஜித் தோவல்,  வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். உள்துறை மந்திரி மற்றும் பிரதமரின் உத்தரவின்படி நாங்கள் இங்கு வந்துள்ளோம். நிலைமையை சமாளிக்க உள்துறை மந்திரி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். கவலைப்படாமல் செல்லுங்கள். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தார்.

Next Story