காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்


காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2020 11:00 PM GMT (Updated: 26 Feb 2020 9:42 PM GMT)

காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நீடிக்கும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கூறியுள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி இந்தியா ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அமைப்புகளில் எழுப்ப முயன்று வருகிறது. அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 43-வது அமர்வு கடந்த 24-ந்தேதி தொடங்கியது. மார்ச் 20-ந்தேதிவரை இத்தொடர் நடக்கிறது.

நேற்று முன்தினம் இக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் மந்திரி ஷிரீன் மசாரி, காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாகவும், ஆகவே, இப்பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றும் கோரினார்.

இதற்கு இந்தியா நேற்று தக்க பதிலடி கொடுத்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் (மேற்கு) விகாஸ் ஸ்வரூப் பேசியதாவது:-

காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. இருக்கிறது. எப்போதும் அப்படியே இருக்கும். பாகிஸ்தான், சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக இருக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்து அடைக்கலம் கொடுத்து, தூண்டி விட்டு வரும் நாடுகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.


Next Story