டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய சோனியா காந்தி போர்க்கொடி


டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய சோனியா காந்தி போர்க்கொடி
x
தினத்தந்தி 26 Feb 2020 11:15 PM GMT (Updated: 26 Feb 2020 9:51 PM GMT)

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவர் விமர்சித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெளிநாடு சென்றிருப்பதால், ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

கூட்டத்தில், டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லி சம்பவங்களை ஆய்வு செய்த காரிய கமிட்டி, இது கடமையில் இருந்து தவறிய தோல்வி என்று உறுதியாக நம்புகிறது. இதற்கான முழு பொறுப்பையும் மத்திய அரசு, குறிப்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஏற்க வேண்டும். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காரிய கமிட்டி கேட்டுக்கொள்கிறது.

மத்திய-மாநில அரசுகளின் கூட்டு தோல்வியால் இந்த மாபெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. நாளுக்குநாள் நிலைமை மோசமாகி வருகிறது.

டெல்லி மக்கள், வெறுப்பு அரசியலை நிராகரிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல், காங்கிரஸ் தொண்டர்கள், சம்பவ இடங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உதவ வேண்டும். வெவ்வேறு இனங்களுக்கிடையே இணைப்பு பாலத்தை உருவாக்க வேண்டும். இதுதான் அன்னை இந்தியாவுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

காரிய கமிட்டி கூட்டம் முடிவடைந்த பிறகு, கட்சி தலைவர் சோனியா காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மேற்கண்ட தீர்மானத்தை அவர் வாசித்தார். பிறகு அவர் கூறியதாவது:-

இந்த கலவரத்துக்கு பின்னணியில், நன்கு திட்டமிடப்பட்ட சதி இருக்கிறது. டெல்லி தேர்தலின்போதே இந்த சதியை காண முடிந்தது. வெறுப்பையும், அச்சத்தையும் தூண்டும் வகையில் பா.ஜனதாவை சேர்ந்த கபில் மிஸ்ரா பேசினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு பா.ஜனதா தலைவர், டெல்லி போலீசுக்கு 72 மணி நேர கெடு விதித்து பேசினார்.

இந்த சம்பவங்களுக்கு டெல்லி அரசுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் சம பொறுப்பு உள்ளது. நிர்வாகத்தை டெல்லி அரசு முடுக்கி விடவில்லை. மக்களை அணுகவில்லை.

கடந்த 72 மணி நேரமாக மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக இருந்ததால், 20-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அமித்ஷா எங்கே இருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார்? அதுபோல், ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் எங்கே இருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார்? இதற்கு காரிய கமிட்டி விளக்கம் கேட்கிறது.

டெல்லி தேர்தல் முடிந்ததில் இருந்து உளவுத்துறை என்ன அறிக்கை கொடுத்தது? கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வன்முறை வெடிக்கும் என்பது உறுதியான நிலையில், அப்போது டெல்லி போலீசின் பலம் என்ன? கூடுதல் படைகள் ஏன் உடனடியாக வரவழைக்கப்படவில்லை?

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

டெல்லி கலவரம் தொடர்பாக, நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பேரணியாக சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திப்பதாக காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) நேரம் ஒதுக்கி உள்ளார்.

அதனால், ஜனாதிபதி மாளிகைக்கு இன்று பேரணியாக சென்று அவரை சந்திக்கிறார்கள்.

அப்போது, டெல்லி கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர தலையிடுமாறு கோரி மனு அளிக்க உள்ளனர்.

இதற்கிடையே, அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற சோனியா காந்தியின் கோரிக்கையை பா.ஜனதா நிராகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

வன்முறை முடிவுக்கு வந்துள்ளது. உண்மையை கண்டறியவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்த யாரையும் விட்டுவிட மாட்டோம்.

இந்த நேரத்தில், வன்முறையை அரசியலாக்குவது மலிவான அரசியல் ஆகும். அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று கேட்பது நகைப்புக்குரியது. அவர் நிலைமையை கட்டுப்படுத்த டெல்லி போலீசுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அமைதியை பராமரிக்க உதவுவது எல்லா கட்சிகளின் கடமை என்று அவர் கூறினார்.

Next Story