டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாததால் அமித்ஷாவை உடனடியாக நீக்க வேண்டும்- சோனியா காந்தி


படம் : ANI
x
படம் : ANI
தினத்தந்தி 27 Feb 2020 7:57 AM GMT (Updated: 27 Feb 2020 7:57 AM GMT)

டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாததால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உடனடியாக நீக்க வேண்டும் ஜனாதிபதியிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

புதுடெல்லி

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசின் தூதுக்குழு இன்று  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தது. அதில் டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வலியுறுத்தியுள்ளனர்.

மனு அளித்த பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த  நாங்கள் ஜனாதிபதியிடம் கேட்டு கொண்டு உள்ளோம். டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாததால் உள்துறை அமைச்சரை உடனடியாக நீக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளோம்.

4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடின, மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

டெல்லியில் கடந்த 4 நாட்களில் நடந்த வன்முறை  என்பது மிகுந்த கவலைக்குரியது மற்றும் தேசிய அவமானம் ஆகும்.  இதில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் மற்றும் 200 பேர் காயமடைந்துள்ளனர், இது மத்திய அரசின் மொத்த தோல்வியின் பிரதிபலிப்பாகும் .  தலைநகரில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். 

ராஜ தர்மத்தை பாதுகாக்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு நாங்கள் ஜனாதிபதியை வலியுறுத்தினோம் என கூறினார்.

Next Story