கொரோனா வைரசால் உலகின் 50 நாடுகள் பாதிப்பு


படம் : daily mail
x
படம் : daily mail
தினத்தந்தி 27 Feb 2020 11:38 AM GMT (Updated: 27 Feb 2020 11:38 AM GMT)

உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 50 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய தொற்றுநோயாக மாறி உள்ளது. பலரை பலி கொண்டுள்ள இந்த கொரோனோ வைரசை உலக சுகாதார அமைப்பு  ஒரு தொற்றுநோயாக அறிவிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரசால் இதுவரை 2804 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில்  இருந்து வைரஸ் பரவத் தொடங்கியது. இது தற்போது நாட்டில் மொத்தம் 78,500 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 29 பேர் இறந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,804 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 29 க்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பேர் வைரஸ் காரணமாக இறந்துள்ளது என்பது இதுவே முதல் தடவையாகும் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

சீனாவுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தாக்கம் தென் கொரியாவில் அதிக அளவில் உள்ளது. தென் கொரியாவில் 1595 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளன. மேலும் 13 பேர் இதுவரை வைரசால் உயிர் இழந்துள்ளனர். 

கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக   ஈரான் மற்றும் இத்தாலியை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 400 பேர் இருப்பதாகவும், அதை தவிர 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஈரானில் 141 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரானில் உள்ளூர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் தலைவர் மொஜ்தாபா சோனூருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இப்போது உலகில் 50 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் 93, தாய்லாந்தில் 40, தைவான் 32, பஹ்ரைன் 26, குவைத், ஆஸ்திரேலியா 23, மலேசியா 22, பிரான்ஸ் 18, ஜெர்மனி 18, இந்தியா-3, பிரேசில் 1, எகிப்து 1, ஜார்ஜியா 1 உட்பட 50  நாடுகளைச் சேர்ந்த 82,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் இந்த வைரசின் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நாடுகளில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் பதற்றமும் அதிகரித்து உள்ளது. 

Next Story