டெல்லியில் வன்முறை பாதித்த இடங்களில் கவர்னர் ஆய்வு - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு


டெல்லியில் வன்முறை பாதித்த இடங்களில் கவர்னர் ஆய்வு - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Feb 2020 10:45 PM GMT (Updated: 28 Feb 2020 9:09 PM GMT)

டெல்லியில் வன்முறை பாதித்த இடங்களில் கவர்னர் ஆய்வு செய்தார். அங்கு நிகழ்ந்த வன்முறைக்கு பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.

புதுடெல்லி,

டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை துணைநிலை கவர்னர் அனில் பைஜல் நேற்று பார்வையிட்டார். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 630 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சமீபத்தில் வன்முறை வெடித்ததால், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி, பஜன்புரா, சந்த்பாக், பாபர்பூர், யமுனா விகார் போன்ற டெல்லியின் வடகிழக்கு பகுதிகள் அனைத்தும் போர்க்களமாக மாறின. கடந்த 25-ந்தேதி முதல் இந்த பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கின.

பயங்கர ஆயுதங்களால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்கியதில் பலர் மாண்டனர். வீடுகள், வழிபாட்டு தலங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, வர்த்தக நிறுவனங்கள் சூறையாடல் என 3 நாட்களாக வன்முறையாளர்கள் நடத்திய வெறியாட்டம் மக்களை பதைபதைக்க வைத்தது.

டெல்லியில் சுமார் 30 ஆண்டுகளுக்குப்பின் நடந்திருக்கும் மிகப்பெரிய இந்த வன்முறை சம்பவங்களில் நேற்று முன்தினம் வரை 38 பேர் பலியாகி இருந்தனர். இதில் படுகாயமடைந்தவர்களில் மேலும் 4 பேர் நேற்று ஆஸ்பத்திரிகளில் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து விட்டது. இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவங்களில் தொடர்புடைய 630 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மக்களிடையே அமைதியும், நல்லிணக்கமும் பேணுமாறு கலவரம் பாதித்த பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. வதந்திகளுக்கு இடம் கொடுக்காமல் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இந்த தீவிர நடவடிக்கைகளால் கலவரம் பாதித்த பகுதிகளில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. நேற்று பல இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டு இருந்தன. தனியார் வாகனங்களை சாலைகளில் பார்க்க முடிந்தது. வீடுகளில் முடங்கி கிடந்த மக்களும் தங்கள் வழக்கமான பணிகளுக்கு செல்வதை காண முடிந்தது.

டெல்லியில் இருந்து திப்ருகர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் 5 குண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக பயணி ஒருவர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தாத்ரி அருகே ரெயிலை நிறுத்தி சோதனையிட்டனர். எனினும் இதில் சந்தேகப்படும் வகையிலான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே டெல்லியில் வன்முறையை அடக்குவதற்காக சிறப்பு போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீவத்சவாவுக்கு, டெல்லி கமிஷனர் பதவியும் கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வன்முறை பாதித்த பகுதிகளை துணைநிலை கவர்னர் அனில் பைஜால் நேற்று பார்வையிட்டார். உள்ளூர் மக்களுடன் பேசி தகவல்களை கேட்டறிந்த அவர், வன்முறைக்குப் பிந்தைய நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். அவருடன் போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

இதைப்போல வன்முறை சம்பவங்களின்போது பெண்கள் யாராவது தாக்கப்பட்டு உள்ளனரா? என்பதை கண்டறிய தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா தலைமையிலான குழுவினரும் நேற்று வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.


Next Story