தேசிய செய்திகள்

உன்னாவ் கொலை வழக்கு; தீர்ப்பு மார்ச் 4ந்தேதிக்கு ஒத்தி வைப்பு + "||" + Unnao murder case: Delhi court defers judgment to Wednesday

உன்னாவ் கொலை வழக்கு; தீர்ப்பு மார்ச் 4ந்தேதிக்கு ஒத்தி வைப்பு

உன்னாவ் கொலை வழக்கு; தீர்ப்பு மார்ச் 4ந்தேதிக்கு ஒத்தி வைப்பு
உன்னாவ் கொலை வழக்கின் தீர்ப்பு வருகிற மார்ச் 4ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம், பங்கர்மா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர், குல்தீப் சிங் செங்கார் (வயது 53).

இவரிடம் உன்னாவை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2017ம் ஆண்டு, ஜூன் மாதம் 4ந்தேதி வேலை கேட்டு சென்றார். அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு, ஏப்ரல் 3ந்தேதி செங்கார் தூண்டுதலின்பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தாக்கப்பட்டார் என்றும் அவர்மீது பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்தனர் என்றும் புகார் எழுந்தது.

ஏப்ரல் 8ந்தேதி, பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பாக தற்கொலைக்கு முயன்றார். அதற்கு மறுநாளே, காவலில் வைக்கப்பட்ட அந்த சிறுமியின் தந்தை மரணம் அடைந்தார்.

ஏப்ரல் 10ந்தேதி கற்பழிப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்துதான், வழக்கு விசாரணை சூடுபிடித்தது.  மூன்றே நாளில் செங்காரும், அவரது கூட்டாளி சசி சிங் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டப்படி அவர்கள் மீது சி.பி.ஐ. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 11ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 17ந்தேதி அந்த சிறுமியும், அவரது குடும்பத்தாரும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதினர்.

அதற்கு மறுநாளில் (ஜூலை 18ந்தேதி), பாதிக்கப்பட்ட சிறுமி சட்டப்படி மேஜரான நிலையில், தனது உறவினர்களுடன் காரில் சென்றபோது லாரி மோதியது. இதில் அவரும், அவரது வக்கீலும் படுகாயம் அடைந்தனர். அவரது உறவுப்பெண்கள் 2 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. செங்கார் மற்றும் 9 பேர் மீது போலீசார் கொலை, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.  தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த செங்கார் பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜூலை 30ந்தேதி, பாதிக்கப்பட்ட பெண், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது அம்பலத்துக்கு வந்தது. அதை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, ஆகஸ்டு 1ந்தேதி, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளையும் டெல்லி கோர்ட்டுக்கு மாற்றியது.

கற்பழிப்பு வழக்கு விசாரணையை 45 நாளில் முடிக்குமாறும் உத்தரவிட்டது.  அதையடுத்து அந்த வழக்கு விசாரணை டெல்லி, திஸ் ஹசாரி கோர்ட்டில் தினந்தோறும் நடந்து வந்தது.  ஆகஸ்டு 9ந்தேதி செங்கார் மீதும், அவரது கூட்டாளி சசி சிங்மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண், லக்னோ மன்னர் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து, டெல்லிக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, இந்த வழக்கில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.  பின்னர் அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கற்பழிப்பு வழக்கில் கடந்த டிசம்பர் 10ந்தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  16ந்தேதி நீதிபதி தர்மேஷ் சர்மா, எம்.எல்.ஏ. செங்கார் குற்றவாளி என தீர்ப்பு அளித்தார். அதே நேரத்தில் அவரது கூட்டாளி சசி சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்தார்.

இந்த வழக்கில் எம்.எல்.ஏ. செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  கற்பழிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், எஞ்சிய 4 வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.  இந்த வழக்கை மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா விசாரணை மேற்கொண்ட நிலையில், வருகிற புதன்கிழமை (மார்ச் 4ந்தேதி) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைப்பு
கொரோனா பெருந்தொற்று சூழ்நிலையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
2. கொரோனா தொற்று உயர்வு; குஜராத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பு
கொரோனா தொற்று உயர்வால் குஜராத்தில் மே 15ந்தேதி அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
3. கொரோனா தொற்று உயர்வு; நீட் பி.ஜி.-2021 தேர்வு ஒத்தி வைப்பு
கொரோனா தொற்று உயர்வை முன்னிட்டு மருத்துவ மாணவர்கள் எழுதும் நீட் பி.ஜி.-2021 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
4. கணவர், மாமியாருக்கு சிறை
குறிஞ்சிப்பாடியில் வரதட்சணை கொடுமையால் நர்சு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர், மாமியாருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.