தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி குற்றவாளிகள் கோர்ட்டில் மனு - திகார் சிறை அதிகாரிகள் பதில் அளிக்க நீதிபதி உத்தரவு


தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி குற்றவாளிகள் கோர்ட்டில் மனு - திகார் சிறை அதிகாரிகள் பதில் அளிக்க நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 29 Feb 2020 11:13 AM GMT (Updated: 29 Feb 2020 10:27 PM GMT)

தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க கோரி நிர்பயா கொலை குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி திகார் சிறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க கோரி நிர்பயா கொலை குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி திகார் சிறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நாளை மறுநாள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் அக்‌ஷய் குமார் ஜனாதிபதிக்கு நேற்று மீண்டும் கருணை மனு அனுப்பினார். அந்த மனுவில் இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் தனக்கு முழுமையாக அளிக்கப்படவில்லை என்றும், மத்திய உள்துறை மற்றும் சிறைத்துறை போதிய ஆவணங்களை இணைத்து அந்த கருணை மனுவை அனுப்பவில்லை என்றும் கூறி உள்ளார்.

இதற்கிடையே அக்‌ஷய் குமாரும், பவன் குப்தாவும், தாங்கள் உள்ளிட்ட 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் சார்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சிங் வாதாடுகையில், அக்‌ஷய் குமார் ஜனாதிபதிக்கு மீண்டும் கருணை மனு அனுப்பி இருப்பதாலும், பவன் குப்தா சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து இருப்பதாலும், நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக நாளைக்குள் (திங்கட்கிழமை) பதில் அளிக்குமாறு டெல்லி திகார் சிறை நிர்வாகத்துக்கு நீதிபதி தர்மேந்தர் ராணா உத்தரவிட்டார்.

இந்தநிலையில், நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஏ.ராஜராஜன் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

Next Story