2020-21-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது


2020-21-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
x
தினத்தந்தி 1 March 2020 5:50 AM GMT (Updated: 1 March 2020 5:50 AM GMT)

2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. வருகிற 5-ந் தேதி முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.

பெங்களூரு,

2020-ம் ஆண்டில் கர்நாடக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் வஜூபாய் வாலா, கூட்டு கூட்டத்தில் கடந்த 17-ந் தேதி உரையாற்றி இருந்தார். பின்னர் கவர்னர் உரையின் மீது கடந்த 18-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை விவாதம் நடைபெற்றது. ஆனால் மங்களூரு கலவரம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளால் கவர்னர் உரையின் மீது முதல்-மந்திரி எடியூரப்பாவால் விளக்கம் அளிக்க முடியாமல் போனது.

இதையடுத்து, கூடுதலாக ஒரு நாள் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரியிடம் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்து விட்டார். மாறாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக கவர்னர் உரைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளிப்பார் என்றும், இதற்காக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 2-ந் தேதியில் (அதாவது நாளை) இருந்து 31-ந் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தெரிவித்திருந்தார்.

அதன்படி, 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை தொடங்கும் கூட்டத்தொடரின் போது ஏற்கனவே சபாநாயகர் அறிவித்தபடி கவர்னர் உரைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளித்து பேச உள்ளார்.

அதன்பிறகு, வருகிற 3-ந் தேதி மற்றும் 4-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அரசியல் அமைப்பு சட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வது ெதாடர்பாக விவாதம் நடக்கிறது. இந்த 2 நாட்களும் அரசியல் அமைப்பு சட்டங்கள் தவிர வேறு எந்த விவாதமும் நடைபெறுவதில்லை என்றும், எம்.எல்.ஏ.க்கள் அரசியலமைப்பு சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 2 நாட்கள் சிறப்பு கூட்டத்தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, வருகிற 5-ந் தேதி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்ய உள்ளார். வருகிற 5-ந் தேதி அவர், 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். முதல்-மந்திரியாக 4-வது முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.பட்ஜெட் தாக்கலுக்காக ஏற்கனவே அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளை கேட்டு பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு விவசாயத்திற்கு என்று எடியூரப்பா தனி பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதுபோல் தற்போதும் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்பு, வழக்கமான பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விவசாயத்திற்காக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், விவசாயிகளை திருப்திப்படுத்தும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் வழங்குவது, ஏழை விவசாயிகள் பசு மாடுகள் வாங்கி கொள்ள கடனுதவி வழங்குவது, வங்கிகளில் கடன் வாங்கி இருந்த விவசாயிகள், 40 சதவீதம் அளவுக்கு கடனை திருப்பி செலுத்தி இருந்தால், மீண்டும் அந்த விவசாயிகளுக்கு கடன் பெற அனுமதி அளிப்பது உள்ளிட்ட சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுபோல, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் லோக் ஆயுக்தா அமைப்பின் அதிகாரத்தை குறைத்துவிட்டு, ஊழல் தடுப்பு படையை முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா கொண்டு வந்திருந்தார். இதனால் ஊழல் தடுப்பு படைக்கு தடை விதிக்கப்பட்டு மீண்டும் லோக் ஆயுக்தா அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பட்ஜெட்டில் எடியூரப்பா அறிவிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி பெங்களூரு விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.

Next Story