சென்னை இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி; மானியமில்லா கியாஸ் சிலிண்டர் விலை ரூ.55 குறைவு


சென்னை இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி; மானியமில்லா கியாஸ் சிலிண்டர் விலை ரூ.55 குறைவு
x
தினத்தந்தி 1 March 2020 10:27 AM GMT (Updated: 1 March 2020 10:27 AM GMT)

சென்னையில் மானியமில்லா கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.55 குறைந்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லா 14 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த வருடம் டிசம்பரில், சென்னையில் ரூ.714 ஆகவும், மும்பையில் ரூ.665 ஆகவும், டெல்லியில் ரூ.695 ஆகவும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.725.5 ஆகவும் இருந்தது.

இதன்பின் இந்த விலை கடந்த ஜனவரியில் மீண்டும் அதிகரித்தது.  இதன்படி, சென்னையில் ரூ.734 ஆகவும், மும்பையில் ரூ.684.50 ஆகவும், டெல்லியில் ரூ.714 ஆகவும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.747 ஆகவும் விற்பனை விலை இருந்தது.

இதன்பின்பு கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த 12ந்தேதி மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.  இதன்படி, மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் ரூ.144.50 உயர்ந்து ரூ.858.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.149 உயர்ந்து ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்ந்து ரூ.829.50 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்ந்து ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கடந்த 20ந்தேதி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சர்வதேச சந்தைகளின் விலை ஏற்றத்தால், கியாஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது,  வரும் மாதங்களில் விலை குறையும் என்று கூறினார்.  இதனிடையே, இன்று (மார்ச் 1ந்தேதி) முதல் நாட்டின் மெட்ரோ நகரங்களில் கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்து 6 முறை விலை உயர்ந்த நிலையில், முதன்முறையாக இன்று இந்த விலை குறைவு அமலாகிறது.

இதன்படி, டெல்லியில் ரூ.805.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.839 ஆகவும், மும்பையில் ரூ.776.50 ஆகவும், சென்னையில் ரூ.826 ஆகவும் விற்பனை செய்யப்படும்.  இதனால் சென்னையில் ரூ.55 வரை விலை குறையும்.

Next Story